
ADMK TVK Alliance : மெளனம் காக்கும் எடப்பாடிஅச்சத்தில் அமித்ஷா!பின்னணியில் விஜய்?
அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக மும்முரம் காட்டி வரும் நிலையில், இபிஎஸ் அலட்சியம் காட்டி வருவதாக சொல்கின்றனர். இதற்கு பின்னணியில் தவெக தலைவர் விஜய் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அதோடு செங்கோட்டையன், தம்பிதுரை, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் பாஜக தலைவர்களை அடுத்தடுத்து சந்தித்தாக கூறப்பட்டது.
இந்த சந்திப்பின் போதெல்லாம் அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பாக பேசப்பட்டதாக கூறப்பட்டாலும் அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் யாரும் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இரண்டு தரப்பினருமே சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சமயத்தில் கூட்டணி தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறிவருகின்றனர்.
இதனிடையே, இபிஎஸ் அமித்ஷாவை டெல்லியில் சந்தித்து பேசிய போது பல்வேறு கண்டிஷன்களை போட்டதாக கூறப்பட்டது. இந்த கண்டிஷன்களை ஏற்றுக்கொண்டு எப்படியாவது கூட்டணி அமைத்து விட வேண்டும் என்று பாஜக மும்மரம் காட்டி வருகிறது. இச்சூழலில் தான் வாக்பு வாரிய திருத்த மசோதா தொடர்பான விவாதத்தின் போது அதிமுக எம்.பிக்கள் இந்த மசோதாவிற்கு எதிராக வாக்களித்தனர்.
ஒரு புறம் இந்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டாலும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் இருக்கும் போது நமக்கு எதிராக அதிமுக எம்.பிக்-க்கள் வாக்களித்துள்ளனர்... இபிஎஸ் போட்ட கன்டிசன்களை ஏற்று நாம் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகவை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறோம் ஆனால் அதிமுக விற்கு கூட்டணி அமைப்பதில் விருப்பம் இல்லாததை போல் செயல்படுவதாக டெல்லி பாஜகவினர் புலம்பியதாக சொல்லப்படுகிறது.
இபிஎஸ் அதிமுக பொதுச்செயலாளர் ஆனப் பிறகு எந்த தேர்தலிலும் வெற்றி பெறவில்லை என்ற சோகம் அவரிடம் இருக்கும் சூழலில் 2026 தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பது மக்களிடம் நமது நம்பிக்கை தன்மையை குறைத்து விடும் என்று இபிஎஸ்-க்கு நெருக்கமானவர்கள் அவரிடம் கூறியதாக தகவல் வெளியானது.
என்ன தான் பாஜக கூட்டணிக்கு மும்முரம் காட்டி வந்தாலும் இபிஎஸ் கொஞ்சம் கூட பாஜக கூட்டணிக்கு செல்ல விருப்பம் இல்லாமல் இருப்பதாக சொல்கின்றனர். இதற்கு பின்னணியில் தவெக தலைவர் விஜய் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக - தவெக கூட்டணி அமைத்தால் தான் பொது எதிரியான திமுகவை வீழ்த்த முடியும் என்று விஜய் நினைப்பதாக சொல்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்...
இது தொடர்பாக தவெக முக்கிய நிர்வாகிகள் இபிஎஸ்-யிடன் பேசி வருவதாகவும் இபிஎஸ்-யும் பாஜகவை கலட்டி விட முடிவுன் செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது.