வேகமெடுக்கும் லஞ்ச வழக்கு.. அமெரிக்கா வைத்த ஆப்பு? கலக்கத்தில் கவுதம் அதானி!

அதானி லஞ்ச புகார் தொடர்புடைய அனைத்து வழக்குகளையும் ஒரே நீதிபதி அமர்வு விசாரணை நடத்துவதற்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதானிக்கு எதிரான அமெரிக்காவின் பிடி நெருங்கியிருக்கிறது.


ஹிண்டன்பர்க் என்ற அமெரிக்க ஆய்வு நிறுவனம் கடந்த 2023 ஆம் ஆண்டு தொடக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில், அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருதாக கூறப்பட்டிருந்தது. இதனால், அதானி பங்குகளில் விலை கடுமையாக பாதிக்கப்பட்டது.  அதே நேரம் அதானி குறித்த விவகாரங்களும் குறைந்தபாடில்லை. எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மோடி அரசிடம் முன் வைத்து வருகின்றன.

இந்த நிலையில், இந்தியாவில் சூரிய மின்சார விநியோகம் தொடர்பான ஒப்பந்தம் பெறுவதற்கு, அதானி குழுமம் ரூ.2,239 கோடி  லஞ்சம் கொடுத்தாகவும், இதன்மூலம், அடுத்த 20 ஆண்டுகளுக்கு, அதானி குழுமத்திற்கு ஆண்டுதோறும் சுமார் 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் லாபம் கிடைக்கும் என அதானி குழுமம் மீது நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் பெடரல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
இந்த வழக்கில் அதானியுடன் சேர்த்து அவரது உறவினர் சாகர் அதானி, வினீத் ஜெயின் உள்ளிட்ட 7 பேர் பெயர்கள் குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன.

அதானி மற்றும் அவரது உறவினர்கள் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றவழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் பங்கு பரிவர்த்தனை பாதுகாப்பு ஆணையம் இரண்டு சிவில் வழக்குகள் தொடர்ந்து உள்ளது.

இச்சூழலில்,  அதானிக்கு எதிரான குற்றவியல் வழக்கு, சிவில் வழக்கு, குற்றம் சாட்டப்பட்டுள்ள மற்றவர்களுக்கு எதிரான சிவில் வழக்கு என விசாரணையில் இருக்கும் இந்த மூன்று வழக்குகளையும் கூட்டாக இணைக்க  அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து நியூயார்க் நீதிமன்றம் தரப்பில் கூறுகையில், “நீதித்துறையின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும், ஒவ்வொரு வழக்குகளும் வெவ்வேறு காலங்களில் விசாரிக்கப்படும். முரண்பாடுகளைத் தவிர்ப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்த வழக்குகள் மாவட்ட நீதிபதி நிகோலஸ் ஜி கராஃபிஸிடம் ஒப்படைக்கப்படும். ஏற்கனவே அவர் அதானிக்கு எதிரான குற்றவியல் வழக்குகளை விசாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola