VK Sasikala in ADMK? : தோற்பது போதும்! சசிகலாவை அழைத்து வாருங்கள்..ஆறுக்குட்டி ஆவேசம்!
VK Sasikala in ADMK? : கோவை விளாங்குறிச்சி பகுதியில் கவுண்டம்பாளையம் தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி ஏபிபி நாடுவிற்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “அதிமுகவிற்கு சசிகலா தலைமை ஏற்க வேண்டும். டிடிவி தினகரன் வழிகாட்ட வேண்டும். எடப்பாடி பழனிசாமி, ஒ.பன்னீர்செல்வம் அனைவரும் ஒன்றிணைந்து கட்சியை நடத்த வேண்டும். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் கட்சியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இரண்டு தேர்தல்களில் தோல்வி அடைந்துள்ளது. கட்சியினர் சந்தோஷமாக இல்லை. கட்சியினர் கரை வேட்டி கட்டிக் கொண்டு நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு வீதிக்குள் செல்லும் நிலை இல்லை. இரட்டை தலைமையால் எங்கு சொல்வது எனத் தெரியவில்லை. கட்டுப்பாடு இல்லாமல் கட்சி செல்கிறது. சசிகலா தலைமையேற்றால் கட்சி சரியாகும். இல்லையென்றால் அதிமுக காணாமல் போய்விடும். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா விருப்பப்படி 100 வருடம் அதிமுக இருக்க வேண்டும் என்றால், எல்லோரும் ஒன்று சேர்ந்து இருந்தால் மட்டும் முடியும்.