Aadhav Arjuna | ஆதவ் அர்ஜுனாவுடன் விஜய் மேடையில் பேசப்போகும் அரசியல் உற்றுநோக்கும் திமுக! | Vijay
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகரும் விஜய் இன்று அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க உள்ளார். விஜய் என்ன பேசப்போகிறார்? என்ற எதிர்பார்ப்பு தி.மு.க மற்றும் கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது.
இதையடுத்து, இன்று சென்னையில் இன்று எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற புத்தகம் வெளியிடப்படுகிறது. இந்த புத்தகத்தை தவெக தலைவர் விஜய் வெளியிட உள்ளார். இந்த நிகழ்ச்சியில் முதலில் நடிகர் விஜய்யுடன் இணைந்து திருமாவளவனும் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால், ஆளுங்கட்சியை விமர்சித்த விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சியில் ஆளுங்கட்சியின் கூட்டணி கட்சித் தலைவரான திருமாவளவன் பங்கேற்பதை தி.மு.க. விரும்பவில்லை. பின்னர் ஏற்பட்ட பல சலசலப்புக்கு பிறகு திருமாவளவன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கமாட்டார் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த பரபரப்பான அரசியல் சூழலில், விஜய் இன்று மாலை நடக்கும் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க உள்ளார். விக்கிரவாண்டி அரசியல் மாநாட்டில் பங்கேற்ற பிறகு நடிகர் விஜய் பங்கேற்கும் முதல் அரசியல் பொது நிகழ்வு இதுவாகும். புத்தகத்தை வெளியிட்டு சிறப்புரை விஜய் ஆற்ற உள்ளதால், அவர் என்ன பேசுவார்? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியிலும், அரசியல் கட்சியினர் மத்தியிலும் எழுந்துள்ளது.
ஃபெஞ்சல் புயல் பாதிப்பு, அதானி லஞ்ச விவகார சர்ச்சை, மகாராஷ்ட்ரா தேர்தல் முடிவுகள், விவசாயிகள் போராட்டம் என மாநில அளவிலும், தேசிய அளவிலும் பல்வேறு பிரச்சினைகள் உள்ள சூழலில் விஜய் இன்று என்ன பேசப்போகிறார்? அவரது பேச்சில் ஆளுங்கட்சி மீதான விமர்சனம் இருக்குமா? விழாவை புறக்கணித்த திருமாவளவன் பற்றி பேசுவாரா? ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம் பகுதி மக்களை நேரில் சென்று சந்திக்காதது பற்றி விளக்கம் அளிப்பாரா? என்ற பல்வேறு எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. விஜய்யின் இன்றைய பேச்சை எதிர்க்கட்சியினரும் உன்னிப்பாக கவனிக்கத் தயாராகியுள்ளனர்.