Aadhav Arjuna Delhi Visit : பற்றி எரியும் கரூர் சம்பவம்டெல்லி கிளம்பிய ஆதவ்! பின்னணி என்ன?
கரூர் துயர சம்பவத்தை தொடர்ந்து தவெக தேர்தல் மேலான்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா திடீர் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. வன்முறையை தூண்டும் வகையில் ட்வீட் போட்டு அதனை டெலிட் செய்த சில மணி நேரங்களில் ஆதவ் டெல்லி சென்றுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
கடந்த செப்டம்பர் 27 மாலை கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், மத்திய மாநில அரசுகள் தனிக்குழு அமைத்து தீவிர விசாரனை மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரத்தில் கரூர் மாவட்ட தவெக பொறுப்பாளர் மதியழகன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ctr நிர்மல்குமார் மீது வழக்கு பதிவுசெய்துள்ளனர்.
தவெக தலைவர் கிட்டத்தட்ட மூன்று நாட்கள் கழித்து நேற்றைய தினம் வீடியோ வெளியிட்டு தனது தரப்பு நியாயத்தை தெரிவித்திருந்தார். எனினும் மருத்துவமனை சென்றோ அல்ல பாதிக்கப்பட்டோர் இல்லங்களுக்கு சென்றோ இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என்ற விமர்சனம் விஜய் மீது தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் நேற்று ஆதவ் அர்ஜுனா நேபாளம் பங்களாதேஷ் போன்று இந்தியாவிலும் புரட்சி நிக்ழும் என ட்வீட் போட்டு பரபரப்பை கிளப்பினார். பின்னர் சில மணித்துளிகளில் அதனை டெலிட் செய்துவிட்டார். இளைஞர்கள் மத்தியில் வன்முறையை தூண்டும் வகையில் ட்வீட் செய்ததற்காக ஆதவ் அர்ஜுனா மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான விசாரனையும் நடந்து வரும் நிலையில், ஆதவ் அர்ஜுனா இன்று டெல்லி புறப்பட்டுள்ளது பல யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.
எனினும், அலுவல் பணிகள் மற்றும் தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க ஆதவ் டெல்லி செல்வதாக அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 5 உத்தரகாண்டில் நடைபெற உள்ள 55வது சப் ஜூனியர் பேஸ்கட் பால் சேம்பியன்சிப் போட்டிக்காக அவர் சென்றிருப்பதாக கூறப்படுகிறது. தேசிய கூடைப்பந்து சங்கத்தில் அவர் பொறுப்பு வகித்து வருவதால் இதற்காக தான் செல்வதாக சொல்கின்றனர்.