கைதாகிறாரா ஆதவ் அர்ஜூனா? வன்முறையை தூண்டும் பதிவு! பதறி டெலிட் செய்த ஆதவ்
தவெக பிரச்சாரத்தில் 41 உயிர்கள் பறிபோய் தமிழ்நாடே சோகத்தில் உள்ள நேரத்தில் இளைஞர்களின் புரட்சி தான் ஒரே வழி என வன்முறையை தூண்டும் வகையில் பதிவிட்டு வசமாக சிக்கியுள்ளார் ஆதவ் அர்ஜுனா. கொத்து கொத்தாக உயிர்களை பறிகொடுத்த நேரத்தில் அதற்கான வருத்தம் துளியும் இல்லாமல் நடந்து கொண்டதாக ஆதவ் அர்ஜூனாவுக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியதும் உடனடியாக பதிவை டெலிட் செய்தார். ஆதவ் அர்ஜூனா கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிறது.
கரூரில் நடந்த தவெக பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விவகாரத்தில் தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.பி. மதியழகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் தலைமறைவாக இருந்த மாவட்ட செயலாளர் மதியழகனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
இந்த நேரத்தில் வன்முறையை தூண்டும் வகையில் ஒரு பதிவிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார் தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுசெயலாளர் ஆதவ் அர்ஜூனா. இதுதொடர்பான அவரது பதிவில், ”சாலையில் நடந்து சென்றாலே தடியடி. சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டாலே கைது. இப்படி ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகளாக காவல்துறை மாறி போனால் மீட்சிக்கு இளைஞர்களின் புரட்சி தான் ஒரே வழி. எப்படி இலங்கையிலும், நேபாளத்திலும் இளைஞர்களும், genz தலைமுறையும் ஒன்றாய் கூடி அதிகாரத்திற்கு எதிரான புரட்சியை உருவாக்கிக் காட்டினார்களோ அதே போல இங்கும் இளைஞர்களின் எழுச்சி நிகழும். அந்த எழுச்சிதான் ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமாகவும் அரச பயங்கரவாதத்திற்கான முடிவுரையாகவும் இருக்கப்போகிறது. பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்” என தெரிவித்திருந்தார்.
அடுத்த சில நிமிடங்களிலேயே இந்த பதவி டெலிட் செய்யப்பட்டது. அதன்பிறகு அதில் இருந்த இலங்கை, நேபாளம் வார்த்தைகளை மட்டும் தூக்கிவிட்டு மீண்டும் அதே கருத்தை பதிவிட்டிருந்தார். ஆதவ் அர்ஜூனாவின் செயலுக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. தவெக பிரச்சாரத்தில் இத்தனை உயிர்களை இழந்து குடும்பத்தினர் வாடும் நேரத்தில் கொஞ்சம் கூட வருத்தமோ அக்கறையோ இல்லாமல் இளைஞர்களிடம் வன்முறையை தூண்டும் வகையில் புரட்சி செய்ய வேண்டும் என சொல்வது கொடூரத்தின் உச்சம் என சமூக வலைதளங்களில் ரவுண்டுகட்டினர். இதனை தொடர்ந்து அந்த பதிவையும் டெலிட் செய்தார் ஆதவ் அர்ஜுனா.
விஜய்யை சுற்றி இளைஞர்கள் கூட்டம் இருக்கும் போது தவறான பாதையில் வழிநடத்துவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஏற்கனவே போலீசாரின் விதிமுறைகளை தவெகவினர் பின்பற்றாதது தான் அசம்பாவிதத்திற்கு காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நேரத்தில், மீண்டும் இளைஞர்களை தூண்டுவிட்டு பாதுகாப்பில்லாத சூழலை ஆதவ் அர்ஜூனா உருவாக்க முயல்கிறாரா என்ற கேள்வி வந்தது. உயிரிழப்புகள், கைது நடவடிக்கைகள், வழக்கு என தவெகவை சுற்றி ஏராளமான பஞ்சாயத்துகள் இருக்கும் நேரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல ஆதவ் அர்ஜூனா நடந்து கொள்வதாக தவெகவினரே முகம் சுழிக்கின்றனர்.
இந்தநிலையில் சமூக வலைதள பதிவு விவகாரத்தில் ஆதவ் அர்ஜூனா கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இளைஞர்கள் மத்தியில் வன்முறையை தூண்டும் வகையில் செயல்பட்டது, கரூர் துயர சம்பவம் தொடர்பாக பொய்யான தகவல்களை பரப்புவது உள்ளிட்ட காரணங்களுக்காக ஆதவ் அர்ஜூனாவை கைது செய்ய திட்டமிட்டுள்ளதாக சொல்கின்றனர்.