Air show in Marina : பறிபோன 5 உயிர்கள்! யார் பொறுப்பு?அரசா? விமானப்படையா?
விமான சாகத்தை பார்க்க உற்சாகமாக கிளம்பி சென்ற 5 உயிர்கள் பரிதாபமாக பறிபோயுள்ளன. இந்த உயிரிழப்புக்கு நிகழ்ச்சியை நடத்திய விமானப்படை காரணமா? இல்லை தேவையான ஏற்பாடுகளை செய்யாத அரசு காரணமா? என்ற கேள்வி சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது. இந்த பிரச்னையை மக்கள் மீது திமுகவினர் திருப்புவதாகவும் மக்களை குறை சொல்வதற்கு அரசு எதற்கு என்றும் மக்கள் கொந்தளிப்பில் இருக்கின்றனர்.
விமானப் படையின் சாகசத்தை பார்ப்பதற்கு காலை 7 மணி முதலே மெரினாவை நோக்கி மக்கள் படையெடுக்க ஆரம்பித்தனர். நேரம் போகப் போக மக்கள் கூட்டம் அதிகரித்ததால் போக்குவரத்து நெரிசலால் சென்னை ஸ்தம்பித்தது. சொந்த வாகனங்களில் வந்தவர்கள் கூட 3 கி.மீக்கு முன்பே வண்டியை போட்டுவிட்டு கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுடன் கால் கடுக்க நடந்தே செல்லும் நிலை ஏற்பட்டது. 15 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மெரினாவில் குவிந்தனர். கொடூர வெயிலுக்கு நடுவே விமான சாகசத்தை பார்த்து கொண்டிருந்தவர்களுக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட ஆரம்பித்தது. அதற்கு முக்கிய காரணம் குடிக்க தண்ணீர் இல்லாதது. பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக மெரினாவில் கடைகள் அடைக்கப்பட்டதால் தண்ணீர் கூட வாங்க முடியாமல் மக்கள் தவித்தனர். குடிநீருக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாக அரசுத் தரப்பில் சொல்லப்பட்டாலும், ரொம்பவே கம்மியான இடங்களில் மட்டுமே தண்ணீர் கிடைத்ததாகவும், அங்கேயும் கூட்டம் அதிகமாக இருந்ததாகவும் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். போகும் வழிகளிலும் தண்ணீர் இல்லாமல் கூட்ட நெரிசலில் மக்கள் தவித்தனர்.
நிகழ்ச்சி முடிந்து மொத்தமாக மக்கள் வெளியேறியதால் போவதற்கு எந்த வழியும் இல்லாமல் திண்டாடும் நிலை ஏற்பட்டது. பார்க்கும் இடங்களில் எல்லாம் மக்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். மயங்கியவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு கூட ஆம்புலன்ஸ் போக வழியில்லாமல் பாதியிலேயே நின்றது. இதனால் போலீசார் வாகனங்கள் மீது தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தும் காட்சியை பார்க்க முடிந்தது. ரயில்களிலும் உயிரை பணயம் வைத்து மக்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் அவல நிலை ஏற்பட்டது. இதையெல்லாம் தாண்டி மாற்றுத்திறனாளிக்கான ஏற்பாடுகள் எதுவும் இருந்ததா என்றால் அப்படி எதுவுமே இல்லை என்ற கொந்தளிப்பும் மாற்றுத்திறனாளிகள் மத்தியில் இருக்கிறது.
இந்த நிகழ்ச்சிக்கு 15 லட்சம் பேர் வருவார்கள் என முன்கூட்டியே எதிர்பார்த்தும் தேவையான ஏற்பாடுகளை செய்யாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. முதல்வர் ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதியும் பாதுகாப்பாக பந்தலுக்கு கீழ் அமர்ந்து சாகசத்தை பார்த்த போது, மக்கள் மட்டும் வெயிலில் தண்ணீர் கூட இல்லாமல் இவ்வளவு கஷ்டத்தை எதிர்கொண்டிருக்க வேண்டுமா என சமூக வலைதளங்களில் கொந்தளித்து வருகின்றனர்.
லிம்கா சாதனை அளவுக்கு திட்டமிடப்பட்ட ஒரு நிகழ்ச்சியில், போக்குவரத்து, மருத்துவம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கூட சரியாக திட்டமிடாதது ஏன் என்று எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நிகழ்ச்சியை நடத்திய விமானப்படைக்கும் இதற்கான பொறுப்பு இருக்கிறது, அவர்களும் ஆலோசனை நடத்தி ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டாமா என்ற குரலும் எழுந்து வருகிறது.
இந்த உயிரிழப்புகளுக்கும், மக்கள் சந்தித்த இந்த மோசமான அனுபவத்திற்கும் யார் பொறுப்பு? விமானப் படையின் அலட்சியமா அல்லது தமிழக அரசின் அலட்சியமா என்று கேள்விகளை அடுக்கி வருகின்றனர். மக்கள் அதிகமாக கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும், தண்ணீர் எடுத்து வந்திருக்க வேண்டும் என்பது போன்ற கருத்துகளை பார்க்க முடிகிறது. பொது இடங்களிலும், பொது நிகழ்ச்சிகளிலும் மக்களே தங்களை பார்த்துக் கொள்ள வேண்டுமென்றால் அரசின் பொறுப்பின் மீது பெரிய அதிருப்தி எழுவதாக சமூக வலைதளங்களில் பலரும் கொந்தளிக்கின்றனர்.