Palani Bus Driver Heart Attack CCTV |ஓடும் பேருந்தில் ஓட்டுநர் மரணம்!நொடிப்பொழுதில் தப்பிய பயணிகள்
பழனி அருகே ஓடும் பேருந்தில் ஓட்டுநர் நெஞ்சு வலி ஏற்பட்டு மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சம்பவ நேரத்தில் நடத்துநர் விரைந்து சென்று ப்ரேக்கை அழுத்தியதால் பேருந்து விபத்தில் சிக்காமல் தப்பியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் பேருந்து ஒன்று பழனி பேருந்து நிலையத்திலிருந்து புதுக்கோட்டை கிராமத்திற்கு சென்றுள்ளது. அந்த பேருந்தை ஓட்டுனர் பிரபு இயக்கி சென்றுள்ளார். பேருந்து கணக்கம்பட்டியில் இருந்து புதுக்கோட்டை சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநர் பிரபுவிற்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் பேருந்து ஓடும் போதே மயங்கி விழுந்து பிரபு உயிரிழந்தார். அருகில் இருந்த நடத்துனர் பிரபு மயங்கியதை பார்த்து விரைவாக செயல்பட்டு பிரேக்கை அழுத்தி சாலை ஓரத்தில் பேருந்தை நிறுத்தியுள்ளார். இதனால் பேருந்து விபத்தில் சிக்காமல் தப்பியது. பயணிகளும் பத்திரமாக உள்ளனர்.
ஓடும் பேருந்தில் பயணிகள் இருந்த நிலையில் நெஞ்சுவலியால் ஓட்டுனர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தகவல் அறியும் சென்ற போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.