
One Nation One Election | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP Lakshmanan
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் இந்தியாவை அதிபர் ஆட்சிக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கை என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லஷ்மணன் அதில் இருக்கும் நடைமுறை சிக்கல்களை தோலுரித்துக் காட்டியிருக்கிறார்.
இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நாடாளுமன்ற மக்களவைக்கும் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வழிவகுக்கக் கூடியது. இது தொடர்பான மசோதாக்களை மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேவால் தாக்கல் செய்தார். பின்னர் இந்த மசோதாக்கள், நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இச்சூழலில் தான் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் இந்தியாவை அதிபர் ஆட்சிக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கை என்றும் அதில் இருக்கும் நடைமுறை சிக்கல்களையும் தோலுரித்துக் காட்டியிருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லஷ்மணன்.
ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதா புதிய விசயம் கிடையாது, பாஜகவின் அடிப்படை கொள்கைகளில் ஒன்று. ஒரே தேசம், ஒரே மொழி, பொதுசிவில் சட்டம் என்ற வரிசையில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டமும் ஒன்றாகும்.
ஒரே நேரத்தில் மக்களவை, மாநில சட்டமன்றங்களுக்கு தேர்தல் நடத்துவதால், தேர்தல் செலவுகளை மிச்சப்படுத்தலாம், நடத்தை விதிகள் காரணமாக பல மாதங்களாக திட்டங்கள் முடங்கி இருக்க வேண்டிய அவசியம் இல்லை என பாஜக கூறுவது உண்மை தான். அதை தாண்டி இந்த திட்டத்தால் வேறு எந்த பயனும் கிடையாது. ஆபத்து தான் உள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்காக இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 129-வது பிரிவில் திருத்தம் மேற்கொள்வதன் மூலம் இரண்டு விசயங்கள் சொல்லப்படுகிறது. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நாடாளுமன்ற மக்களவைக்கும், அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடைபெறும். இதில் மக்களவை தேர்தலுக்குதான் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
நாடாளுமன்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் முதல் கூட்டம் எப்போது நடைபெறுகிறதோ அது தான் ஆட்சிகாலத்தின் தொடக்கம். இதில் பிரச்சினை எங்கு தொடங்குகிறது என்றால் ஒரு மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்த இயலாது என தேர்தல் ஆணையம் நினைத்தால் அந்த பின்னணியை விளக்கி குடியரசுத்தலைவருக்கு கடிதம் அனுப்பினால் அவர் எப்போது தேர்தல் நடத்துவது என்று முடிவு செய்வார். ஓரிடத்தில் மக்களவைத் தேர்தல் நடத்த சூழல் உள்ளபோது, சட்டமன்ற தேர்தல் நடத்த சூழல் இல்லை என்று கூறுகின்றனர் என்றால் இது ஏமாற்று வேலை இல்லையா?”என்று மத்திய அரசை விளாசியிருக்கிறார் பத்திரிகையாளர் எஸ்.பி.லஷ்மணன்.
கடந்த 2018ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் பிடிபி – பாஜக கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. இதனை தொடர்ந்து 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற்றபோது, அங்கு சட்டமன்ற தேர்தலை நடத்தியிருக்கலாம். ஆனால் சட்டமன்ற தேர்தலை நடத்த உகந்த சூழல் இல்லை என்று கூறி பாஜக அரசு தேர்தல் நடத்தவில்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் முறை அமலுக்கு வந்தால் பாஜக இதே வேலையை பல்வேறு மாநிலங்களில் மேற்கொள்ளும்.
தங்களின் அரசியல் சுயலாபத்திற்காகவும், பிறரை பழிவாங்கவும் சட்டமன்ற தேர்தலை நடத்தாமல் இழுத்தடிக்கும். உதாரணத்திற்கு தமிழ்நாட்டில் வரும் 2029ஆம் ஆண்டு ஒரே நேரத்தில் மக்களவை, சட்டமன்றத்திற்கு தேர்தல் நடைபெற உள்ளது. அப்போது, சூழல் சரியில்லை என கூறி மக்களவைக்கும் மட்டும் தேர்தல் நடைபெறுகிறது. பின்னர் அடுத்த 6 மாதத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று புதிய அரசு அமைகிறது எனில் அந்த அரசின் பதவிக்காலம் 4.5 ஆண்டு காலம் தான்.
இதேபோல், 2026 முதல் 2029 வரை 3 ஆண்டுகள் மட்டும் சட்டமன்றத்தின் ஆயுட்காலம் எனில் சட்டப்பேரவையின் பதவிக்காலத்தை 3 ஆண்டுகளாக குறைக்கும் விதமாக அரசியல் அமைப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் முறை என்பது நாட்டை அதிபர் ஆட்சி முறையை நோக்கி கொண்டு செல்வதற்கான தொடக்கப்புள்ளி”என்று விளாசியுள்ளார்.