அதிகாரி நெஞ்சுவலி நாடகம் “சார் இப்படி நடிக்காதீங்க” தவெகவினர் ஆர்ப்பாட்டம் | Officer Fake Heart Attack
சீர்காழி அருகே குடிநீர் விநியோகம் செய்யக்கோரி த.வெ.க சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டக்காரர்கள் கேட்ட கேள்வியால் நெஞ்சுவலிப்பதாக அதிகாரி சாலையில் விழுந்துள்ளார். பின் வீடியோ எடுப்பதை அறிந்து தானாகவே தான் வந்த அரசு வாகனத்தில் அந்த இடத்தை விட்டு புறப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீர்காழி அருகே புங்கனூர் கிராமத்தில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் உப்பு நீராக வருவதால் நல்ல குடிநீர் விநியோகம் செய்திட வலியுறுத்தி தமிழக வெற்றி கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் கோபிநாத் தலைமையில் ஒன்றிய செயலாளர் கமல்நாத் மணிவேல் உள்ளிட்ட கட்சியினர் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தகவல் அறிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த சீர்காழி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் வருகை தந்தார்.அப்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் இது நாள் வரை நல்ல குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்படவில்லை என அடுக்கடுக்காக கேள்விகள் கேட்ட நிலையில் திடீரென நெஞ்சை பிடித்துக் கொண்டு சாலையில்அதிகாரி சரவணன் சரிந்தார்.
நெஞ்சு வலிப்பதாக கூறியதால் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆம்புலன்ஸை வரவழைத்த நிலையில் தன்னை வீடியோ எடுப்பதை அறிந்து சுதாகரித்துக் கொண்ட அதிகாரி சரவணன் தனது வாகனத்திலேயே மருத்துவமனைக்கு செல்வதாக கூறிய அவ்விடத்தில் இருந்து உடனடியாக புறப்பட்டு சென்றார். குடிநீர் பிரச்சனைக்காக ஆர்ப்பாட்டம் நடந்த இடத்திற்கு வந்த அதிகாரி நெஞ்சு வலிப்பதாக கூறி சாலையில் விழுந்து கூச்சலிட்டதும் பின்னர் புறப்பட்டு சென்றதும் ஆர்ப்பாட்டக்காரர்களிடமும் பொதுமக்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் அவரது செயல் நகைப்பை ஏற்படுத்தியது.