Antaryami sahoo : ஒரு மனிதன் உருவாக்கிய காடு - Teacher அந்தர்யாமியின் கதை!
விதைகளைத் தொட்டியில் தூவிவிட்டு அது வளர்கிறதா என்று எட்டிப்பார்க்கும் பழக்கம் உங்களுக்குச் சிறுவயதில் இருந்தது உண்டா? அப்படியென்றால் அந்தர்யாமி சாஹூவின் கதை உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். ஒடிசாவின் கண்டிலோ கிராமத்தைச் சேர்ந்த அந்தர்யாமி முதன்முதலில் ஒரு விதையை விதைத்தபோது அவருக்கு வயது 11. அவர் விதைத்தது குரங்கு எச்சம் பட்ட ஆலம் விதை. தான் படித்த பள்ளியின் வளாகத்தில் அதை விதைத்தவர் தினமும் அது முளைக்கிறதா இல்லையா என எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தார். அந்தர்யாமிக்கு மரங்கள் காதலானது அப்படித்தான். அன்று தொடங்கி ஒவ்வொரு வருடமும் தனது கிராமத்தின் பொதுவெளிகளில் தொடர்ச்சியாக இரண்டு மரங்களை நட்டு வருகிறார் அந்தர்யாமி. அவருக்கு வயது ஆக ஆக மரங்களின் மீதான ஆசையும் வளர்ந்தது. உத்திரப்பிரதேசத்தின் சிலெட்படா பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்த பிறகு அங்கிருக்கும் பிள்ளைகளையும் தன்னைப் போல மரம் நடப் பயிற்சி கொடுத்தார்.