Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
விவாகரத்து கேட்கும் மனைவி, குழந்தையின் மருத்துவ செலவு, லட்சக்கணக்கான கடன் தொல்லை என ஏகப்பட்ட பிரச்னையால் 28 வயது இளைஞர் ஒருவர் 41வது மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிரவைத்துள்ளது. இந்த முடிவை எடுப்பதற்கு முன் அவர் தனது தந்தையுடன் உருக்கமாக பேசிய செல்போன் உரையாடல்கள் வெளியாகியுள்ளன.
ஹரியானாவை சேர்ந்த 28 வயதான சம்பவ் ஜெயின் என்ற இளைஞர் உத்தரபிரதேசத்தில் உள்ள சூப்பர்நோவா பில்டிங்கின் 41வது தளத்தில் உள்ள அறையை புக் செய்துள்ளார். அப்போது திடீரென ரூமின் பால்கனி கம்பி வழியாக வெளியே வந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பக்கத்தில் ஏசி வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளர்கள் சம்பவ் ஜெயினை தடுத்து மேலே கொண்டு வர எவ்வளவோ முயற்சி செய்துள்ளனர். ஆனால் நான் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறேன் என சொன்ன சொல்லிக் கொண்டிருந்த இளைஞர், அவரை பிடித்திருந்த அனைவரது கைகளையும் உதறிவிட்டு 41வது மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்த நிலையில், போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் அவர் கடைசியாக தனது தந்தையிடம் செல்போனில் பேசிய உரையாடல்கள் போலீசாருக்கு கிடைத்தன. தன்னால் கடன் தொல்லையை தாங்க முடியவில்லை என்றும் தற்கொலை எண்ணம் வருவதாகவும் இளைஞர் தனது அப்பாவிடம் புலம்பியுள்ளார். கடனை நான் பார்த்து கொள்கிறேன் நீ வீட்டுக்கு வந்துவிடு என அவரது அப்பாவும் ஆறுதல் சொல்லியுள்ளார். 3 நாட்களுக்கு முன்பாகவே வீட்டை விட்டு வெளியேறிய தனது மகன் எங்கே இருக்கிறார் என தெரியாமல் பெற்றோரும் அவரை கண்டுபிடிக்க முடியாமல் இருந்துள்ளனர்.
மேலும் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரிக்கையில் சம்பவ் ஜெயினிம் கடன் பற்றிய உண்மைகள் வெளியே வந்துள்ளது. 2024ல் திருமணமான நிலையில் 2025ல் அவருக்கு குறைமாதத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதனால் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் குழந்தையை வைப்பதற்கு சுமார் 40 லட்சம் வரை செலவாகியுள்ளது. குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே கணவன் மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவரது மனைவி விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்றுள்ளார். அப்போது அவரது மனைவி 1 கோடி ரூபாய் ஜீவனாம்சம் கேட்ட நிலையில், 15 லட்சம் ரூபாய்க்கு பேசி முடித்துள்ளனர். அதில் 7 லட்சம் ஏற்கனவே கொடுத்துவிட்ட நிலையில், சுமார் 8 லட்சம் இன்னும் கொடுக்க வேண்டியிருக்கிறது. இது தவிர வேறு சில கடன் தொல்லைகளும் சம்பவ் ஜெயினுக்கு இருப்பதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதனால் சமாளிக்க முடியாமல் அவர் தற்கொலை செய்து கொண்டதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. இதுமட்டுமல்லாமல் அவர் 140 கிலோ எடை இருந்ததாகவும், அதனால் ஏற்பட்ட உடல்நலப் பிரச்னைகளாலும் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அவர் தற்கொலை செய்து கொண்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.