20 ஆண்டுகள் 5 தேர்தல்தோல்வியே சந்திக்காத இளைஞன்மோடியின் புதிய Boss
அரசியலில் அனுபவம் தான் ஆகசிறந்த ஆயுதம் என நம்பும் காங்கிரஸ் 83 வயதான மல்லிகார்ஜுன கார்கேவை தலைவராக முன்னிறுத்தி களம் காணும் நிலையில், 45 வயது இளைஞனை தலைவராக நியமித்து இந்தியாவில் பல கட்சிகள் செய்ய துணியாத ஒரு காரியத்தை துணிகரமாக செய்துள்ளது பாஜக. இந்நிலையில் இந்த நாட்டுக்கே நான் பிரதமராக இருக்கலாம், ஆனால் இவர் தான் என்னுடைய பாஸ் என்று பிரதமர் மோடி கை காட்டியுள்ள பாஜகவின் புதிய தலைவரான நிதின் நபின் யார் என்று விரிவாக பார்க்கலாம்...
பாஜக-வின் தேசிய தலைவராக இருந்த ஜே.பி. நட்டாவின் பதவிக் காலம் 2023ல் முடிவடைய, 2024 மக்களவைத் தேர்தல் உள்ளிட்ட பல காரணங்களை காட்டி புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதில் காலம் தாழ்த்தி வந்தது பாஜக. இந்நிலையில் தான் ஒரு பக்கம் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க ஏன் திணறுகிறீர்கள் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பிக்கொண்டிருக்க, இன்னோரு பக்கம் அதே எதிர்க்கட்சிகள் எடுக்கத் தயங்கும் முடிவை தில்லாக எடுத்துள்ளது பாஜக. எதிர்கால அரசியல் இளைஞர்கள் கையில் தான் இருக்கிறது என்று வெறும் பேச்சுக்கு மேடைக்கு மேடை சில கட்சிகள் கூவிக்கொண்டிருக்கும்போது, நாட்டின் 70 சதவீத பகுதிகளை ஆளும் பாஜக தங்களை வழிநடத்தி அழைத்து செல்ல இளம் ரத்தம் தேவை என்ற தொலைநோக்கு திட்டதுடன் நிதின் நபின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
1980-ல் பாஜக தொடங்கப்பட்ட அதே ஆண்டில் மே 23-ம் தேதி ராஞ்சியில் பிறக்கிறார் நிதின். சிறு வயதிலிருந்தே அரசியல் ஆர்வம் மிக்க நிதின், பாஜகவின் மாணவர் அமைப்பான ABVP-யில் தன்னுடைய அரசியல் பயணத்தைத் தொடங்குகிறார். இந்நிலையில் பாட்னா மேற்கின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த தந்தை நபின் கிஷோர் பிரசாத் சின்ஹா உயிரிழந்தார். இந்நிலையில் இன்ஜினியரீங் படிப்பை பாதியில் விட்டுவிட்டு தேர்தல் களம் புகுந்தார் 26 வயதே ஆன நிதின் நபின். அன்று முதல் இன்று வரை தேர்தல் அரசியல் களத்தில் நிதின் ஒருமுறை கூட தோற்றதே கிடையாது.
2006 இடைத்தேர்தலில் வென்று முதல்முறையாக சட்டமன்றத்துக்குள் நுழைந்த நிதின், அதன் பின் 2010, 2015, 2020, 2025 என போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றிப்பெற்றுள்ளார். அதை தொடர்ந்து 2021ல் முதல் முதல்முறையாக பீகார் அமைச்சரவையிலும் இடம்பெற்றார் நிதின்.
அதே நேரம் தேசிய அளவில் பாஜக-வின் யுவ மோர்ச்சா பிரிவின் செயலாளராகவும், பீகாரில் அதன் தலைவராகவும் கட்சிப் பணியாற்றினார். இந்நிலையில் 2023-ல் சத்தீஸ்கர் சட்டமன்ற தேர்தலின் பொறுப்பு, நிதின் நபின் இடம் ஒப்படைக்கப்பட்டது. காங்கிரஸை அரியணையிலிருந்து இறக்கி, பாஜகவின் ஆட்சியை சத்தீஸ்கரில் கொண்டு வந்தார் நிதின்.
இந்நிலையில் கடந்த நவம்பரில் நடந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் நிதிஷ் உடன் கூட்டணி அமைத்து பாஜக ஆட்சியை பிடிக்க சாலை மேம்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றார் நிதின்.
அடுத்த ஒரு மாதத்திலேயே யாரும் எதிர்பாராத விதமாக நிதின் நபினை தேசிய செயல் தலைவராக நியமித்தது பாஜக தலைமை. இந்நிலையில் பம்பரமாக சுழன்று கட்சி பணிகளை கவனிப்பது, அதே நேரம் சீனியர்களை அரவணைத்து செல்வது என அனைத்து பாக்ஸ்களையும் டிக் அடித்தார் நிதின்.
இத்தகைய சூழலில் தான் போட்டியின்றி ஒருமனதாக கட்சியின் தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் நிதின் நபின். இதில் அனைவரின் பார்வையையும் ஈர்ப்பது நிதினின் வயதும், அவரை வைத்து பாஜக தீட்டும் மெகா பிளானும் தான்.
இன்று மத்தியிலும், மாநிலங்களிலும் பாஜக-வை எதிர்க்கும் கட்சிகளான காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய எந்த கட்சிகளிலும் 50 வயதுக்கு குறைவானவர்கள் தலைவராக இல்லை. எதிர்க்கட்சிகள் எப்படி பாஜக-வை வீழ்த்தலாம் என்று திட்டம்போடும் அதே வேளையில், அடுத்த கால்நூற்றாண்டு அரசியலை மனதில் வைத்து இளைஞரின் கையில் பொறுப்பை கொடுத்துள்ளது பாஜக.
இந்நிலையில் நிதின் நபின் பதவியேற்பு விழாவில் பேசிய பிரதமர் மோடி, ``நான் நாட்டுக்கே பிரதமராக இருக்கலாம், 25 ஆண்டாக அரசை வழிநடத்தி இருக்கலாம், ஏன் 3 முறை தொடர்ந்து பிரதமராக வெற்றி பெற்று இருக்கலாம். ஆனால் என்னுடைய பாஸ் நிதின் நபின் தான். பாஜக-வின் பாரம்பரியத்தை நிதின் நபின் முன்னெடுத்துச் செல்வார்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த இடத்தில் தான் பாஜக-வை எப்படி வீழ்த்துவது என்று தெரியாமல் திணறுகின்றன எதிர்க்கட்சிகள். அதே நேரம் குறுகிய கால இலக்குகளை விட, நீண்ட கால இலக்குகளையே கூறிவைக்கும் பாஜக இந்த இடத்தில் தங்களுக்கு நிகர் தாங்கள் தான் என்பதை மீண்டும் மீண்டும் உணர்த்துகிறது. அதன் வெளிபாடு தான் கடந்த சில ஆண்டுகளில் பாஜக கண்டுள்ள வளர்ச்சி. எத்தனை விமர்சனங்களை எதிர்கட்சிகள் முன்வைத்தாலும், பாஜகவிடம் நிச்சயம் அனைத்து கட்சிகளும் பயில வேண்டிய இடம் இது.