Nilgiris couples sell kids : Lockdownல் குழந்தை விற்பனை- நீலகிரியில் பகீர் சம்பவம்..
வறுமையால் குழந்தைகளை விற்ற பெற்றோர் கைது - நீலகிரியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள காந்தல் கஸ்தூரி பாய் காலணியை சேர்ந்தவர் ராபின். 29 வயதான இவர், ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி மோனிஷா (24) கூலி வேலை செய்து வருகிறார். இத்தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை இருந்தது. இந்நிலையில் 3 குழந்தைகளையும் வறுமை காரணமாக கவனிக்க முடியாததால் வர்ஷா (3) என்ற முதல் பெண் குழந்தையை மோனிஷாவின் அக்கா பிரவீனா பராமரிப்பில் விட்டு இருந்தனர். 2 வயது பெண் குழந்தை மற்றும் 3 மாத ஆண் குழந்தையை குடும்ப சூழ்நிலை காரணமாக சட்ட விரோதமாக தத்து கொடுத்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் முதல் குழந்தையான 3 வயது வர்ஷாவையும் விற்க முயன்றதாக கூறப்படுகிறது. இது குறித்த தகவலின் பேரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், ஊட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அதில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த முகமது பரூக் (51) என்பவருக்கு இரண்டு வயது பெண் குழந்தையை 25 ஆயிரம் ரூபாய்க்கும், சேலம் மாவட்டம் குண்டுக்கல்லூர் பகுதியை சேர்ந்த உமா மகேஸ்வரி (37) என்பவருக்கு ஆண் குழந்தையை 30 ஆயிரம் ரூபாய்க்கும் தத்து கொடுப்பதாக கூறி விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை காவல் துறையினர் திருப்பூரில், சேலத்தில் விற்கப்பட்ட 2 குழந்தைகளையும் மீட்டனர். மேலும் குழந்தைகளை வாங்கியவர்களை ஊட்டிக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் நீலகிரியில் சுற்றுலா முடங்கியுள்ளதால் வருமானம் இன்றி தவித்ததாகவும், குடும்ப சூழல் மற்றும் வறுமை காரணமாக 2 குழந்தைகளை பணத்துக்காக விற்பனை செய்ததாகவும் ராபின் மற்றும் மோனிஷா ஆகியோர் ஒப்புக் கொண்டனர். இதில் காந்தல் பகுதியை சேர்ந்த டிரைவர்கள் கமல் (30), பரூக் (35) ஆகியோர் இடைத்தரகர்களாக செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து ராபின், மோனிஷா, கமல், பரூக், முகமது பரூக், உமா மகேஸ்வரி ஆகிய 6 பேர் மீது சட்ட விரோதமாக குழந்தைகளை விற்றது, பணம் கொடுத்து வாங்கியது, உடந்தையாக இருந்தது ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் 6 பேரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். மீட்கப்பட்ட குழந்தைகளில் 2 பெண் குழந்தைகள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழுமத்திலும், 3 மாத ஆண் குழந்தை ஊட்டி அரசு தலைமை மருத்துவமனை குழந்தைகள் பிரிவிலும் பராமரிக்கப்பட உள்ளது என மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் தெரிவித்தார். வறுமை காரணமாக குழந்தைகளை விற்ற பெற்றோர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.