Maipi clarke | கிழித்தெறியப்பட்ட மசோதா! ஹக்கா நடனமாடிய பெண் MP! வாயடைத்து போன நாடாளுமன்றம்
எங்க உரிமைய கெடுக்குற மசோதா வரவே கூடாது” என மசோதாவையை கிழித்து போட்டு பழங்குடியின நடனம் மூலம் எதிர்ப்பை காட்டி நியூசிலாந்து நாடாளுமன்றத்தையே அலறவிட்டுள்ளார் இளம் எம்.பி மைபி கிளார்க்.
நியூசிலாந்து வரலாற்றியில் முதல்முறையாக 21 வயது இளம்பெண்ணான மைபி கிளார்க் நாடாளுமன்றத்திற்கும் அடியெடுத்து வைத்தார். கடந்த ஜனவரி மாதம் அவர் பேசிய முதல் உரையிலேயே உலக நாடுகளின் கவனத்தை தன் பக்கம் திருப்பி அசத்தினார். நியூசிலாந்தின் மாவோரி பழங்குடியினரின் பாரம்பரிய நடனமான ஹக்கா நடனம் மற்றும் பாடலுடன் சேர்ந்து மாவோரி மொழியில் கை மற்றும் உடலை அசைத்துப் பேசியது, நாடாளுமன்றத்தையே அதிரவைத்தது. சிறுவயதில் இருந்தே அடக்குமுறைகளைச் சந்தித்து வந்த மாவோரி இனத்தைச் சேர்ந்த மைபி-கிளார்க், மாவோரி மக்களின் குரல்களாக நாடாளுமன்றத்தில் ஒலிக்க ஆரம்பித்தார்.
இந்தநிலையில் மாவோரி மக்களின் உரிமையை பறிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள ஒரு மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நாடாளுமன்றத்தில் இதற்கான வாக்கெடுப்பு நடந்து கொண்டிருக்கும் போதே எழுந்து நின்ற மைபி கிளார்க், மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மசோதாவின் நகலை ஆக்ரோஷமாக கிழித்தெறிந்தார். மாவோரிகளின் பாரம்பரிய நடனம் மற்றும் முழக்கங்களுடன் மசோதாவை கிழித்தெறிந்து அதிரடி காட்டினார். அவருடன் மற்ற எம்.பிக்களின் கேலரியில் இருந்தவர்களும் சேர்ந்து கொண்டு எழுந்து நின்று முழக்கமிட்டதால் நாடாளுமன்றத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. யாரையும் கட்டுப்படுத்த முடியாததால் உடனடியாக அவையை ஒத்திவைத்தார் சபாநாயகர்.
மாவோரி மக்களின் உரிமைகளுக்கான வைதாங்கி ஒப்பந்தத்தில் அரசு கைவைத்துள்ளது தான் இந்த போராட்டத்திற்கு காரணம். 1840ல் பிரிட்டிஷாருக்கும், நியூசிலாந்தை பூர்வீகமாக கொண்ட மாவோரி இன மக்களுக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தம் தான் வைதாங்கி. 2 பேரும் எப்படி ஆட்சி செய்யலாம் என்பது தொடர்பாக 500க்கும் மேற்பட்ட மாவோர் தலைவர்கள் கையெழுத்திட்டு முடிவான ஒப்பந்தம் தான் அது. அந்த ஒப்பந்தத்தில் உள்ள தகவல்கள் தான் தற்போதை ஆட்சி வரை திட்டங்கள் கொண்டு வருவதிலும், சட்டம் தொடர்பாகவும் முடிவுகளை எடுப்பதில் முக்கியமானதாக இருக்கின்றன. இந்த ஒப்பந்தத்தில் மாற்றம் கொண்டு வருவதற்கான மசோதாவுக்கு தான் மாவோரி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நியூசிலாந்து மக்கள் தொகையில் 20 சதவீதம் இருக்கும் மாவோரி மக்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் மசோதா இருப்பதாக கொந்தளித்து போராட்டங்கள் வெடித்துள்ளன.
இந்த மசோதாவை எதிர்த்து நாடாளுமன்றத்திலேயே எம்.பி மைபி கிளார்க் மீண்டும் தனது பாரம்பரிய மொழியில் பேசி உலக நாடுகளின் கவனத்தையும் நியூசிலாந்து பிரச்சனையின் பக்கம் திருப்பியுள்ளார்.