Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆய்வுக்காக வந்த அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷிடம் அர்ச்சகர்கள் இவர் அமைச்சர் என தெரியாமலேயே பணம் வாங்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரமேஷ் பொறுப்பேற்றுள்ளார். புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர்கள் நேரடியாக களத்துக்கு சென்று ஆய்வு செய்து வருகின்றனர். அந்த வகையில் அமைச்சர் ரமேஷும் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கோயில்களில் ஆய்வு செய்து பக்தர்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார்.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் அமைச்சர் ஆய்வுக்காக சென்றார். அப்போது அதிகாரிகள் யாரும் இல்லாமல் தான் அமைச்சர் என்பதை வெளிப்படுத்தாமல் கோயில் வளாகத்தில் சுற்றிப் பார்த்துள்ளார். அப்போது கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு கட்டணம் எவ்வளவு? என அங்கு இருந்த அர்ச்சகர்களிடம் அமைச்சர் ரமேஷ் கேட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அர்ச்சகர்கள் ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் என தெரிவித்துள்ளனர்.
மேலும் அமைச்சருடன் வந்த 4 பேருக்கு சேர்த்து தலா 1000 ரூபாய் என கேட்டு 4 பேருக்கு 4000 ரூபாய் தர வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். இதனையடுத்து அர்ச்சகர்களிடம் 4000 ரூபாயை Gpay மூலம் அனுப்பியுள்ளார். இவர்தான் அமைச்சர் என தெரியாமலேயே அர்ச்சகர்கள் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து அன்னதான கூடத்தில் அமைச்சர் ரமேஷ் ஆய்வு செய்தபோது, அதிகாரிகளிடம் அர்ச்சகர்கள் தரிசனத்திற்கு ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் வாங்கியது தொடர்பாக கேள்வி எழுப்பி டோஸ் விட்டதாக கூறப்படுகிறது. கோயிலில் சிறப்பு தரிசனம் என சொல்லி அதிக பணம் வசூலிப்பதாக பக்தர்கள் புகார் வைத்துள்ள நிலையில், அதனை கண்டுபிடிப்பதற்காகவே அமைச்சரே நேரடியாக சென்று இந்த ஆய்வை நடத்தியதாக சொல்கின்றனர்.