Mayiladuthurai Womens College | அவசரகதியில் கல்லூரி திறப்பு? ”பெஞ்ச் கூட இல்லை” மாணவிகள் வேதனை
கடந்த 16ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்த கல்லூரி வகுப்பறை கட்டிடத்தில் எந்தவித அடிப்படை வசதியும் செய்யாத நிலையில், மாணவிகள் தரையில் அமர்ந்து பாடம் படிக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடிநீர் வசதி கழிவறை வசதி மற்றும் வகுப்பறைக்கு தேவையான பெஞ்சுகள், மின்விசிறிகள் கூட இல்லை என்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.
மயிலாடுதுறையில் தர்மபுரம் ஞானாம்பிகை அரசினர் பெண்கள் கலைக் கல்லூரி அமைந்துள்ளது. இங்கு பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நான்கு கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் தமிழக அரசு சார்பில் புதிதாக 10 வகுப்பறைகள் மற்றும் நூலகம் கொண்ட கட்டிடம் கட்டப்பட்டது. கடந்த 16ஆம் தேதி மயிலாடுதுறைக்கு வருகை புரிந்த முதலமைச்சர். மு க ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் இந்த கட்டிடத்தை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து புதிய கட்டிடத்தில் வகுப்புகள் நடைபெற துவங்கியுள்ளன. புதிய கட்டிடம் பாதுகாப்பற்ற முறையில் சுற்றுசுவர்கள் எதுவுமில்லாத நிலையில், கட்டிடத்தின் உள்ளேயும் எந்த அத்தியாவசிய தேவையும் ஏற்படுத்தப்படவில்லை. குறிப்பாக பெண்கள் பயிலும் இந்த கல்லூரி கட்டிடத்தில் கழிவறை வசதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
மாணவிகளுக்கு குடிநீர் வசதி செய்து தரப்படாத நிலையில், வகுப்பறைகளுக்கான அமர்ந்து பாடம் பயிலும் பெஞ்சுகள் கூட வழங்கப்படவில்லை. இதன் காரணமாக மாணவிகள் தரையில் அமர்ந்து பாடம் பயில்வது அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.. முதலமைச்சர் திறக்க வேண்டும் என்பதற்காக அவசரக்கதியில் கட்டிட வேலை நிறைவு பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் கட்டிடத்தில் மின்விசிறிகள் எதுவும் பொருத்தப்படவில்லை. உடனடியாக குறைகளை சரி செய்து மாணவிகள் கல்வி பயில போதிய வசதிகள் செய்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.