அமைச்சரை தடுத்து நிறுத்திய நபர் அதிர்ந்த கோவி. செழியன் மயிலாடுதுறையில் பரபரப்பு | Govi Chezhiaan

மயிலாடுதுறையில் உயர்கல்வித்துறை அமைச்சரை  பொதுமக்கள் வழிமறித்து தூர்வாராத குளத்தை பார்வையிடும்படியும் இதற்கு நடவடிக்கை எடுத்தால் அடுத்த முறை திமுகவிற்கு ஓட்டு , இல்லனா முதல்முறையாக ஓட்டு மாற்றிப் போடப்படும் என பகிரங்கமாக அமைச்சர் முன்பு கூட்டத்தில் இருந்த ஒருவர் கத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ஒன்றியத்திற்கு உட்பட்ட பட்டமங்கலம் ஊராட்சியில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் 72 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி விட்டு புறப்பட்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள பட்டமங்களம் குளத்தை தூர்வாரக்கோரியும், பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் பொது மக்களுக்கு பட்டா வழங்க கோரியும் அமைச்சர்களை வழிமறித்து பொதுமக்கள் மனு அளித்தனர்.

தொடர்ந்து குளத்தை பார்வையிட்டு செல்லுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அமைச்சர்கள் ஆகாயத்தாமரைகள் மண்டி கிடந்த குளத்தை பார்வையிட்டனர். அப்போது அமைச்சர் கோவி. செழியன் இந்த குளத்தை பார்க்காமல் போனால் தான் பாவம் என்று கூறினார். இந்த நிலையில் கூட்டத்தில் இருந்த ஒருவர் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்றும், திமுகவிற்கு ஓட்டளித்த நாங்கள் இந்த குளத்தை தூர்வாரி அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரவில்லை என்றால் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவினருக்கு ஓட்டளிக்க மாட்டோம் என்று தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர்கள் கூறி புறப்பட்டு சென்றனர்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola