சங்கி குழுவில் பராசக்தி குழு மாணிக்கம் அட்டாக் SK ஷார்ப் ரிப்ளை
சங்கி குழுவில் பராசக்தி குழு!
மாணிக்கம் தாகூர் அட்டாக்! SK-வின் ஷார்ப் ரிப்ளை!
மோடி கலந்துகொண்ட பொங்கல் விழாவில் பராசக்தி படக்குழுவினர் கலந்துகொண்டதை காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் விமர்சித்திருக்கும் நிலையில், சிவகார்த்திகேயன் காங்கிரஸுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.
இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தின் வரலாற்றை மையமாக வைத்து சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் நடிப்பில் உருவான `பாராசக்தி' திரைப்படம் பொங்கல் வெளியீடாக ஜ்னவரி 10-ம் தேதி வெளியானது. ஆனால், இப்படம் வாராலாற்றைத் திரித்து எடுக்கப்பட்டிருப்பதாக முதல்நாளிலிருந்தே காங்கிரஸ் தரப்பில் விமர்சனங்கள் எழுந்தது. குறிப்பாக, படத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி காட்சிப்படுத்தப்பட்ட விதம், அப்போது ஆட்சியிலிருந்த காங்கிரஸ் அரசை காட்சிப்படுத்தப்படுத்தப்பட்ட விதம் தொடர்பாக காங்கிரஸார் கடுமையாக விமர்சித்தனர். தமிழக இளைஞர் காங்கிரஸ் ஒருபடி மேலே சென்று, ``பராசக்தி படத்தை தடை செய்ய வேண்டும்" என்று அறிக்கை வெளியிட்டது. இந்த நிலையில்தான், டெல்லியில் மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் இன்று நடைபெற்ற பொங்கல் விழாவில் பராசக்தி படக்குழு பங்கேற்றிருக்கிறது. மோடி கலந்துகொண்ட இந்தப் பொங்கல் விழாவில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், ஜி.வி. பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதனால் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், ``சங்கிகுழு பொங்கலில் பராசக்தி குழு. ஆனா ஜனநாயகனுக்குத் தடை" என்று எக்ஸ் தளத்தில் விமர்சித்திருக்கிறார். மறுபக்கம், பொங்கல் விழாவில் தனியார் ஊடகத்திடம் பராசக்தி படம் தொடர்பாக காங்கிரஸ் தரப்பிலிருந்து வரும் விமர்சனங்கள் குறித்த கேள்விக்குப் பதிலளித்த சிவகார்த்திகேயன், ``அவர்கள் புரிந்துகொள்வார்கள். இரண்டாவது முறை பார்த்தால் இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ளவர்கள். படத்தில் நாங்கள் எதையும் கூடுதலாகக் கூறவில்லை" என்று கூறினார். இவற்றுக்கு மத்தியில், 1950, 60-களில் காங்கிரஸின் இந்தித் திணிப்புக்கெதிரான மொழிப்போரின் வரலாற்றைக் கருவாக வைத்துப் படமெடுத்த பராசக்தி குழுவினர், இன்று மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் மறைமுகமாக இந்தியைத் திணிக்கும் பாஜக-வின் அமைச்சர் இல்லத்தில் நடைபெறும் பொங்கல் விழாவில் பங்கேற்றிருக்கின்றனர் என்று விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன.