
ஆயிரம் ஜன்னல் வீடு! 7 தலைமுறை... 600 பேர்! ஒரே இடத்தில் கூடிய குடும்பம்
உசிலம்பட்டியில் கூட்டு குடும்ப ஒற்றுமையை இன்றைய தலைமுறைக்கு எடுத்து சொல்லும் வகையில் 7 தலைமுறையைச் சேர்ந்த 240 குடும்ப உறவினர்கள் 600 க்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்தவர்கள் சட்டமுத்து - அடஞ்சாரம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு 5 ஆண் குழந்தைகள் மற்றும் 5 பெண் குழந்தைகள் உள்ளனர். அடுத்தடுத்த தலைமுறை என மொத்தமாக 240 குடும்பங்கள் இருக்கின்றன. மூதாதையர் இறப்பிற்கு பின் உறவினர்களின் இல்ல விழாக்களில் மட்டுமே ஒரு சில உறவினர்கள் சந்தித்துக் கொள்ளும் நிலை இருந்துள்ளது. இந்த 240 குடும்பத்தினரையும், ஒருங்கிணைத்து கூட்டு குடும்பத்தின் பெருமையை எடுத்துக் கூற நினைத்துள்ளார் வாரிசுகளில் ஒருவரான பாண்டி. அதனால் ஒவ்வொரு வீடாக சென்று பத்திரிகை வைத்து அழைத்துள்ளார். 3 தலைமுறையை சேர்ந்தவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இதனை கேள்விபட்ட உறவினர்களும் மொத்தமாக வந்துள்ளனர். அதனால் 7 தலைமுறையை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட உறவினர்கள் நிகழ்ச்சிக்கு வந்து பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளனர்.
பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் வரை அனைவரையும் ஒரே இடத்தில் பார்த்து பேசும் வாய்ப்பு கிடைத்ததை வாழ்நாள் முழுவதும் மறக்கவே முடியாது என குடும்பத்தினர் ஆனந்தக் கண்ணீரில் இருந்துள்ளனர். ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை இது போன்ற உறவினர்களை சந்திக்கும் நிகழ்ச்சியை திட்டமிட்டிருப்பதாகவும், குடும்ப வாழ்க்கையை மீட்டெடுப்பதன் மூலம், தமிழர்களின் மரபுகளையும் மீட்டெடுத்துள்ளது போல தோன்றுவதாகவும் பூரிப்புடன் பேசியுள்ளனர்.