தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு மீண்டும் மோதல் ஆரம்பமாகியுள்ளது. தீபம் ஏற்றத் தடை விதித்து விட்டு கொடியேற்ற மட்டும் அனுமதி கொடுக்கலாமா என போலீசாருடன் மக்கள் கடும் வாக்குவாதம் செய்த நிலையில், பரபரப்புக்கு மத்தியில் கொடியேற்றம் நடந்தது.
திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தின் வழக்கு விசாரணையில் இருக்கிறது. இந்தநிலையில் வரும் ஜனவரி 6ஆம் தேதி பெரிய ரத வீதியில் உள்ள சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா சந்தனக்கூடு விழா நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு மலை மீது உள்ள சிக்கந்தர் தர்காவில் கொடியேற்ற இஸ்லாமியர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இருபதாம் தேதி மலை மேல் உள்ள தர்கா கொடிக்கம்பத்தை பழுது பார்ப்பதற்காக மலைப்பாதை வழியாக இஸ்லாமியர்கள் அனுமதிக்கப்பட்டனர். அப்போது மலைப்பாதையில் உள்ள பழனி ஆண்டவர் கோவில் தெருவை சேர்ந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மலையடிவாரத்தில் உள்ள தங்களை மலைக்குச் செல்ல அனுமதிக்காமல் வெளியூரில் இருந்து வரக்கூடிய இஸ்லாமியர்களை எப்படி அனுமதிக்கலாம் என கூறி கையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா உள்ளிட்டோர் அவர்களை நேரில் சந்தித்து பேசினார்.
இந்த நிலையில் சந்தனக்கூடு விழா பெரியார் ரத வீதியில் உள்ள தர்காவில் இரவு 8 மணி அளவில் தொடங்கியது. அப்போது அப்பகுதி மக்கள் கையில் அகல் விளக்கை ஏந்தி மலை மேல் தீபம் ஏற்ற செல்வதாக கூறி அரோகரா கோசமிட்டு போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மற்றொரு பாதையில் கையில் அகல் விளக்குடன் சென்று தீபம் ஏற்ற முயற்சித்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தாங்கள் கொண்டு வந்த தீபத்தை பழனியாண்டவர் கோவிலில் ஏற்ற அனுமதி தர வேண்டும் என கூறினர். ஒருவருக்கு மட்டும் அனுமதி அளித்ததால் கோயில் முன்பு பெண் ஒருவர் விளக்கேற்றி வழிபாடு செய்தார்.
இதனை தொடர்ந்து பல்வேறு பரபரப்புகளுக்கு பின் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தர்காவில் சந்தனக்கூடு திருவிழாவையொட்டி கொடியேற்றப்பட்டது.