அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?
முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜூ, செம்மலையை மேடையில் வைத்துக் கொண்டே அதிமுகவினர் அடிதடியில் இறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்லூர் ராஜூ, டாக்டர் சரவணன் இடையிலான மோதல் இன்று கூட்டத்திலேயே வெளிப்பட்டு விட்டதாக சொல்கின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் உத்தரவின் பேரில் அதிமுக முன்னாள் அமைச்சர் கள ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே நெல்லை, கும்பகோணம் கள ஆய்வுக் கூட்டங்களிலும் அதிமுகவினர் அடித்துக் கொண்டனர். நெல்லையில் எஸ்.பி.வேலுமணி முன்னிலையிலேயே மாவட்ட செயலாளர் கணேச ராஜா ஒழுங்காக வேலை பார்ப்பதில்லை என கொள்கை பரப்புச் செயலாளர் பாப்புலர் முத்தையா கூட்டத்திலேயே போட்டு உடைத்தார். நாடாளுமன்ற தேர்தல் தோல்வியால் வெறுப்பில் இருக்கும் அதிமுகவினர், கள ஆய்வு கூட்டங்களில் அதனை வெளிப்படுத்துவதாக சொல்லப்படுகிறது.
இந்தநிலையில் மதுரையில் இன்று கள ஆய்வுக் கூட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜூ, அமைச்சர் செம்மலை ஆகியோர் மேடையில் அமர்ந்திருக்கும் போது, மேடைக்கு வந்த அ.தி.மு.க., தொண்டர் ஒருவர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சில நிமிடங்களில் கள ஆய்வு கூட்ட மேடையிலே கைகலப்பு ஏற்பட்டது. அதிமுகவினர் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.
பிரச்னை குறித்து கட்சி நிர்வாகிகள் சிலரிடம் விசாரித்தோம் அவர்கள் கூறுகையில், "கூட்டத்தில் செல்லூர் ராஜூ கைகாட்டிய நபர்களுக்கு மட்டுமே பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதனால் கட்சி பற்றியும், மாவட்ட செயலாளர் பற்றியும் பெருமையான விஷயங்களை மட்டுமே பேசினார்கள். அப்போது சிலர் தங்களுக்கும் பேச வாய்ப்பளிக்க வேண்டும் என எழுந்தனர். நாடாளுமன்ற தேர்தலில் மோசமாக தோல்வி அடைந்துவிட்டோம், பல இடங்களில் பூத் கமிட்டிகள் ஒழுங்காக இல்லை, மாவட்ட செயலாளர்கள் ஒழுங்காக வேலை பார்க்கவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி முன்னாள் அமைச்சர்களை மேடையில் வைத்துக் கொண்டே மாறி மாறி அடித்துக் கொள்ள ஆரம்பித்தனர். டாக்டர் சரவணன் தரப்பினர் தான் வேண்டுமென்றே இந்த பிரச்னையை கிளப்பியதாக செல்லூர் ராஜூ தரப்பினர் குற்றம்சாட்டினர்.
செல்லூர் ராஜூ கடந்த எம்.பி தேர்தல் முதலே சரவணனுக்கு எதிராக உள்ளடி வேலை செய்தாக மோதல் இருக்கிறது. செல்லூர் ராஜூ, டாக்டர் சரவணன் மதுரையில் அதிமுகவில் வளர்ச்சியை எட்டக் கூடாது என நினைக்கிறார். எம்.பி தேர்தலின் போதும் சரவணனுக்கு ஆதரவாக இல்லாததால் தான் மதுரையில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு சென்றுவிட்டதாக சரவணன் தரப்பினர் குற்றம்சாட்டுகின்றனர். செல்லூர் ராஜூவை மிஞ்சி அரசியல் செய்ய வேண்டும் என டாக்டர் சரவணன் நினைக்கிறார் என செல்லூர் ராஜூ தரப்பில் அதிருப்தி இருக்கிறது. இந்த கூட்டம் மூலம் இரு தரப்புக்கும் இடையே உள்ள அரசியல் வெளிப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர். அதிமுக கூட்டங்களில் அடுத்தடுத்து மோதல் வெடித்து வருவது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.