Accident CCTV | பைக் மீது மோதிய லாரி தலை நசுங்கி இறந்த ஆசிரியை பகீர் சிசிடிவி காட்சிகள்
மதுரையில் பைக் மீது லாரி மோதியதில் ஆசிரியை தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் பள்ளி மாணாக்கர்கள் மற்றும் சக ஆசிரியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் வண்டியூர் பகுதியை சேர்ந்தவர் அம்பிகா (45). இவர் மதுரை கருப்பாயூரணி பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராகவும், ஒருங்கிணைப்பாளராகவும் பணிபுரிந்துவந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை தனது வீட்டில் இருந்து பைக்கில் பணிக்கு சென்றுள்ளார்.
அப்போது கருப்பாயூரணி எம்.பி.மஹால் அருகே வளைவான சாலையில் சென்றபோது ஆசிரியை அம்பிகாவின் பைக்கின் பின்னால் வந்த லாரி பைக்கின் ஓரத்தில் உரசியதில் அம்பிகா தடுமாறி கீழே விழுந்துள்ளார்.
அப்போது அவரின் தலையில் லாரியின் சக்கரம் ஏறியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலயே பரிதாபமாக உயிரிழந்தார்..
இதையடுத்து உடலை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்தனர். பின்னர் விபத்து குறித்து கருப்பாயூரணி காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். இந்நிலையில் ஆசிரியை விபத்தில் உயிரிழந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த ஆசிரியை தலைக்கவசம் அணிந்திருந்த நிலையிலும் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.