Kanchipuram elephant | ”கோயிலை விட்டு போகமாட்டேன்” தலையாட்டிய காஞ்சிபுரம் யானை! வைரலாகும் வீடியோ!

காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சொந்தமான 3 யானைகள் பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கோயிலுக்கு வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நாங்கள் கோயிலை விட்டு போக மாட்டோம் என யானைகள் தலையாட்டி உணர்வுகளை வெளிப்படுத்திய வீடியோ வைரலாகி வருகிறது.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில், வழிபாட்டு நடைமுறைக்காக சந்தியா, இந்துமதி மற்றும் ஜெயந்தி ஆகிய மூன்று யானைகள் அரசு அனுமதியுடன் பராமரிக்கப்பட்டு வந்தன. இந்த யானைகளை பராமரித்து வந்த குணசீலன் 2015 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அதன்பிறகு கோயிலில் இருந்த யானைகளை, அவரது குடும்பத்தினர் பராமரித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து விலங்குகள் மீட்பு மற்றும் பராமரிப்பு மையத்திற்கு யானைகளை கொண்டு செல்ல, காஞ்சிபுரம் மடம் சார்பில் முடிவெடுக்கப்பட்டது. 

யானைகளை லாரி மூலமாக, அனுப்பி வைக்க முயற்சி செய்தபோது சந்தியா என்ற யானை லாரியில் இருந்து குதித்து காஞ்சிபுரத்திலிருந்து செல்ல மறுத்தது. அதன் பிறகு சந்தியா யானையை வேடல் என்ற பகுதியில் வைத்து பராமரிக்கப்பட்டது. அதன் பிறகு மூன்று யானைகளும் மரக்காணம் அருகே கொண்டு செல்லப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தன. அதன் பிறகு தங்களுக்கு சொந்தமான யானைகளை காஞ்சிபுரத்திற்கு அனுப்பி வைக்குமாறு காஞ்சிபுரம் காமகோடி பீடம் சார்பில் வனத்துறையிடம் விண்ணப்பிக்கப்பட்டது. இதற்கு வனத்துறை சார்பில் தகுந்த பதில் வராததால் காஞ்சி மடம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் மூன்று யானைகளையும் திருச்சி காப்பகத்தில் இருந்து காஞ்சி பீடம் நிர்வாகிகளிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தநிலையில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் யானைகள் மீண்டும் காஞ்சிபுரம் வருவது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2016இல் யானை காஞ்சிபுரத்திலிருந்து செல்ல மாட்டேன் என தலையாட்டிய வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola