Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!

காஞ்சிபுரத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தன்னை வீடு கட்ட விடாமல் தடுப்பதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்து பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமைகளில், மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்க கூட்டம் நடைபெற்றது. 

அப்போது காவிதண்டலம் கிராமத்தைச் சேர்ந்த காமாட்சி என்பவர் பெட்ரோல் கேனுடன் திடீரென நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அந்த பாதுகாப்புக்கு இருந்த போலீசார் பெண்ணிடம் இருந்த பெட்ரோல் கேனை பிடுங்கி எறிந்தனர். 

இது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட காமாட்சி என்ற பெண்ணிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் , காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகா காவி தண்டலம் கிராமத்தில் மலைக்குறவன்   இனத்தைச் சார்ந்த தங்களது நான்கு குடும்பங்கள் 23 ஆண்டுகளாக அதே கிராமத்தில் வசித்து வருகிறோம். ரேஷன் கடை, ஊர் மேடைகளிலும் தங்கி குடும்பம் நடத்தி வருவதாக  வேதனையுடன் தெரிவித்தார்.

ரேஷன் அட்டை ஆதார் அட்டை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் தங்களுக்கு உள்ளன எனவும், ஒரக்காட்டு பேட்டை கிராம பகுதியில் தங்களுக்கு இடம் ஒதுக்கி எங்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பட்டா வழங்கப்பட்டது. 

ஆனால் தலைவர் மற்றும் கிராம மக்கள் வீடு கட்ட விடாமல் தடுத்து வருவதாக தெரிவித்தனர் இதனால் மழை, வெயிலில் சிரமப்படுகிறோம் எனவும்,  மாற்று இடம் தருகிறோம் என தாசில்தார் கூறியும் நடவடிக்கை இல்லை மற்றும் மாற்றிடம் வழங்கி வீடு கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பென் கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. 

உடனடியாக இதுகுறித்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பெண்ணிடம் சமாதானம் செய்து மனுவைப் பெற்று அனுப்பி வைத்தார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் பெட்ரோல் கேனுடன் நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola