Odisha : ஒடிசாவில் நடந்த சதி! BJP-BJD கூட்டணி பிளவு ஏன்? உடைத்து பேசிய வி.கே.பாண்டியன்

ஒடிசாவில் பாஜக மற்றும் பிஜேடி கூட்டணி ஏன் அமையவில்லை என்பது குறித்து, அக்கட்சியின் முக்கிய தலைவரும், தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான வி.கே. பாண்டியன் விளக்கமளித்துள்ளார்.

ஒடிசாவில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலை ஆளும் பிஜேடி உடன் கூட்டணி அமைத்து பாஜக எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது. இதுதொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், கடைசி நேரத்தில் இரண்டு கட்சிகளும் தனித்தே களம் காண்பதாக அறிவித்தன. இந்நிலையில் தான், பிஜேடியின் முக்கிய தலைவரும், தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான வி.கே. பாண்டியன், பதில் அளித்துள்ளார்.

பாஜக உடன் ஏன் கூட்டணி அமையவில்லை என கேட்கப்பட்ட கேள்விக்கு, “ஒரு பெரிய காரணத்திற்காக இரண்டு கட்சிகளின் தலைவர்களும் (மோடி மற்றும் நவீன் பட்நாயக்), ஒன்று சேர விரும்பியது குறித்து நான் ஏற்கனவே எனது பல அறிக்கைகளில் தெளிவுபடுத்தியுள்ளேன். ஆனால் பாஜகவின் உள்ளூர் தலைவர்கள் இந்த கூட்டணி அமைவதை விரும்பவில்லை. இதன் காரணமாகவே பாஜக மற்றும் பிஜேடி கூட்டணி அமையவில்லை" என பிஜேடி விகே பாண்டியன் பதிலளித்தார்.

நடப்பாண்டு தேர்தலில் ஒடிசா மக்கள், நவீன் பட்நாயக்கிற்கு தக்க பாடம் புகட்டுவார்கள் என பிரதமர் மோடி பேசியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “பிரதமர் மோடி 2019ம் ஆண்டிலும் இதையே தான் கூறினார். மக்கள் நவீன் பட்நாயக்கை வழியனுப்பி வைப்பார்கள் என்று அவர் கூறினார். ஆனால் நவீன் பட்நாயக் தனது சொந்த வழியில், 'இரண்டு கட்ட தேர்தல்கள் பிஜேடிக்கு ஏற்கனவே பெரும்பான்மை கிடைத்துள்ளது, எனவே எனது பதவியேற்புக்கு நான் உங்களை தாழ்மையுடன் அழைக்கிறேன்' என அடக்கமான முறையில் பதிலளித்துள்ளார். எனவே பதவியேற்பு விழாவிற்கு மோடி சில பரிசுகளுடன் வருவார் என்று நம்புகிறேன்” என விகே பாண்டியன் பதிலடி தந்துள்ளார்.

எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு, “நான் என்ன செய்கிறேன் என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறேன். நவீன் பட்நாயக் ஆறாவது முறையாக முதலமைச்சராகவதற்கு உதவவே, ஐஏஎஸ் பதவியிலிருந்து விலகும் முடிவை மனப்பூர்வமாக எடுத்தேன். எனவே, மற்ற அனைத்திற்கு காத்திருக்கலாம். நவின் பட்நாயக் மீண்டும் முதலமைச்சர் பதவியை பெற உதவுவதில் நான் மிகவும் கவனம் செலுத்துகிறேன்” என வி.கே. பாண்டியன் பதிலளித்துள்ளார்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola