CJI Suryakant |ARTICLE 370 முதல் SIR வரை!Gamechanger சூர்யகாந்த் 53-வது தலைமை நீதிபதி! Supreme Court
தலைமை நீதிபதி கவாயின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சூர்யா காந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.
நாட்டின் புதிய தலைமை நீதிபதியாக உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி சூர்யா காந்த் நியமிக்கப்பட்டுள்ளார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் பரிந்துரையின் பேரில் அவரது நியமனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
தலைமை நீதிபதி கவாய் நவம்பர் 23 அன்று ஓய்வு பெற உள்ளார். இதனை தொடர்ந்து, நீதிபதி சூர்யா காந்த் நவம்பர் 24 அன்று தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்கவுள்ளார். அவரது பதவிக்காலமானது 2027 பிப்ரவரி 9 வரை சுமார் 15 மாதங்கள் அந்தப் பதவியில் தொடர்வார். ஹரியானாவிலிருந்து வரும் முதல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்ற பெருமையையும் சூர்யா காந்த் பெறுகிறார்.
பிப்ரவரி 10, 1962 அன்று ஹரியானாவின் ஹிசாரில் பிறந்த சூர்யா காந்த், ஒரு நடுத்தர குடும்பத்தில் வளர்ந்தவர். சட்டத்துறையில் சிறந்து விளங்கிய அவர், 2000-ஆம் ஆண்டு ஹரியானாவின் அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.
2004-ல் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகவும், 2007 முதல் 2011 வரை தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் (NALSA) நிர்வாகக் குழுவில் பணியாற்றினார், பின்னர் 2011 இல் சட்டத்தில் முதுகலைப் பட்டத்தில் முதல் வகுப்பில் முதலிடம் பெற்றார். அவர் அக்டோபர் 5, 2018 அன்று இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார், அதன் பிறகு மே 24, 2019 அன்று இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு உயர்த்தப்பட்டார். மே 14, 2025 முதல், அவர் NALSA இன் நிர்வாகத் தலைவராகவும், இந்திய சட்ட நிறுவனத்தின் பல குழுக்களிலும் பணியாற்றுகிறார்.
இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான அனுபவமுள்ள நீதிபதி சூர்யா காந்த், தாராளமான மற்றும் மனிதநேய பார்வைக்காக நீதித்துறையில் தனித்தன்மை பெற்றவர்.
அவரது நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கு முழு வாய்ப்பும் வழங்கப்படுவதாகவும், சிறிய வழக்குகள் கூட ஆழமாகக் கேட்டு தீர்வளிப்பதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில், தலைமை நீதிபதி பி.ஆர். கவாயிடம் காலணியை வீசிய வழக்கறிஞருக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்ப மறுத்து, “இதை மேலும் பெரிதாக்க விரும்பவில்லை” என்று கூறிய அவரது முடிவு, நீதித்துறையில் பெருந்தன்மையின் எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.
பீகார் SIR (தேர்தல் பட்டியல் திருத்தம்), சிவசேனா தேர்தல் சின்னம் தகராறு, சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுதல் மற்றும் டிஜிட்டல் கைதுகள் உள்ளிட்ட பல முக்கியமான வழக்குகளை அவர் உச்ச நீதிமன்றத்தில் விசாரித்துள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் article 370ஐ மத்திய அரசு நீக்கியது செல்லுபடியாகும் என்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற அமர்வில், சூர்ய காந்த் இடம் பெற்றுள்ளார்
மேலும் சமீபத்தில் பீகாரில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை வெளியிட வேண்டும் என உத்தரவிட்ட உச்ச நீதிமன்ற அமர்விலும் சூர்ய காந்த் இடம் பெற்றுள்ளார். உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் உள்பட வழங்கறிஞர் சங்கங்களில் மூன்றில் ஒரு பங்கு இடங்களை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை சூர்ய காந்த் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..





















