தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் மறைந்தார் இசைக்குயில் ஜானகி சோகத்தில் இசையுலகம்

இந்திய இசைத்துறையில் பழம்பெரும் பின்னணி பாடகியான எஸ்.ஜானகி வயது மூப்பு காரணமாக மறைந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1938-ல் ஆந்திர மாநிலம் குண்டூரில் பிறந்த எஸ்.ஜானகி, சிறுவயதிலேயே முறையாக இசைப் பயிற்சி பெற்று பாடத் தொடங்கினார்.

1957-ல் தனது 19-வது வயதில் விதியின் விளையாட்டு என்ற தமிழ் படத்தின் மூலம் பின்னணி பாடகியாக இசையுலகில் அறிமுகமானார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி உட்பட 17 இந்திய மொழிகளிலும், ஜப்பான், ஜெர்மன், அரபு, சிங்களம், ஆங்கிலம் ஆகிய வெளிநாட்டு மொழிகளிலும் பாடியுள்ளார்.

தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் இவர் சிறந்த பின்னணி பாடகிக்காக, 4 முறை தேசிய விருதுகளையும், 33 வெவ்வேறு மாநில விருதுகளையும் வென்றுள்ளார்.

தமிழில் இளையராஜா, எஸ்.பி.பி, யேசுதாஸ், ஜெயச்சந்திரன் ஆகியோருடன் இவரின் காம்போவுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உண்டு.

எம்.எஸ்.வி, இளையராஜா முதல் ஏ.ஆர்.ரஹ்மான், அனிருத் வரையில் பல்வேறு தலைமுறை இசையமைப்பாளர்களின் இசையில் இவர் பாடியுள்ளார்.

இசைத்துறையில் இவரின் பங்களிப்புக்காக இவரை கவுரவிக்கும் வகையில், 2013-ல் மத்திய அரசு இவருக்கு பத்ம பூஷன் விருது அறிவித்தது.

இருப்பினும், இது மிகவும் தாமதமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது என்றும், தென்னிந்திய கலைஞர்களுக்கு தகுந்த அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டி அந்த பத்ம பூஷன் விருதை அவர் ஏற்க மறுத்துவிட்டார்.

கடைசியாக 2018-ல் பண்ணாடி என்ற திரைப்படத்தில் பாடிய இவர், அரைநூற்றாண்டுக்கும் மேலான தனது இசைப் பயணத்தில் சுமார் 50,000 பாடல்களைப் பாடியுள்ளார்.

இந்த நிலையில், 88 வயதான இவர் வயது மூப்பு காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டு மைசூரில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்தார்.

கடந்த 70 ஆண்டுகளாக தனது கொண்டாட்டம், துள்ளல், சோகம், ஏக்கம், விரகம் என எல்லா ஜானரிலும் வசீகர குரலால் ரசிகர்களை மகிழ்வித்த ஜானகியம்மாவின் மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola