NS Raja Subramani : தமிழருக்கு தலைமை பொறுப்பு! முப்படைக்கும் ஒற்றைத் தலைவன்..யார் இந்த ராஜா சுப்ரமணி?
இந்தியாவின் புதிய முப்படைத் தலைமைத் தளபதியாக தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போதைய தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சௌகான் மே 30-ம் தேதியுடன் ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து, அந்தப் பொறுப்பை ராஜா சுப்ரமணி ஏற்கவுள்ளார்.
நாட்டின் பலம் வாய்ந்த மூன்று படைகளான ராணுவம், விமானப்படை, கப்பற்ப்டை ஆகியவற்றை ஒருங்கிணைத்து போர்க்காலங்களில் துரிதமாக செயல்படும் நோக்கில் உருவாக்கப்பட்டது தான் முப்படை தலைமை தளபதி பதவி. இந்த உயரிய பொறுப்பு தற்போது தமிழ்நாட்டுக்காரருக்கு வழங்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறை. நாட்டில் உயரிய பொறுப்பாக கருதப்படும் இந்த பதவிக்கு தேர்வாகியுள்ள லெப்டினன்ட் ஜெனரல் ராஜா சுப்ரமணி யார்? அவர் செய்த சாதனைகள் என்னென்ன? என்பதை விரிவாக காணலாம்.
தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட என்.எஸ். ராஜா சுப்ரமணி மும்பையில் தான் பிறந்து வளர்ந்தார்.தேசிய பாதுகாப்பு அகாடமி (NDA) மற்றும் இந்திய ராணுவ அகாடமியின் (IMA) முன்னாள் மாணவர். பிரிட்டனின் Joint Services Command and Staff College-ல் பயின்றவர்.லண்டன் கிங்ஸ் கல்லூரியில் முதுகலைப் பட்டமும், மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஆய்வுகளில் ஆய்வியல் நிறைஞர் (M.Phil) பட்டமும் பெற்றவர்.
இந்திய ராணுவத்தில் மிகவும் அனுபவம் வாய்ந்த அதிகாரியான இவர் 1985-ம் ஆண்டு கார்வால் ரைபிள்ஸ் (Garhwal Rifles) பிரிவில் தனது ராணுவப் பயணத்தைத் தொடங்கினார். கடந்த 40 ஆண்டுகளாக பல்வேறு முக்கியப் பொறுப்புகளை ராஜா வகித்துள்ளார். பின்னர் ராணுவத் துணை தளபதியாக பணியாற்றினார். உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள மத்திய ராணுவக் கட்டளை தளபதியாகவும் பணியாற்றினார்.
முப்படைகளுக்கும் தலைமை தளபதியாக இவரை நியமிக்க பல காரணங்கள் இருந்தாலும் இவரது சில முக்கிய சாதனைகளை பின்வருமாறு காண்போம். எல்லைப் பகுதிகளில் நிலவும் சவால்களை எதிர்கொள்வதில் இவர் கைதேர்ந்தவர். குறிப்பாக, சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைகளில் இவரது உத்திகள் முக்கியமானதாகக் கருதப்படுகின்றன."
ராணுவத்தின் துணைத் தளபதி (VCOAS), மத்திய பிராந்திய கமாண்டிங்-இன்-சீஃப் மற்றும் 2-வது படைப்பிரிவின் (Strike Corps) தளபதியாகப் பணியாற்றியுள்ளார்.
இவரது சீரிய சேவையைப் பாராட்டி பரம் விசிஷ்ட் சேவா பதக்கம் (PVSM), அதி விசிஷ்ட் சேவா பதக்கம் (AVSM) உள்ளிட்ட உயரிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.தற்போது தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில் ராணுவ ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார்.
மே 31-ம் தேதி பொறுப்பேற்கவுள்ள ராஜா சுப்ரமணி, முப்படைகளை ஒருங்கிணைக்கும் பணியோடு, ராணுவ விவகாரங்கள் துறையின் (Department of Military Affairs) செயலாளராகவும் செயல்படுவார். நவீனப் போர் முறைகளுக்கு ஏற்ப இந்திய ராணுவத்தை உருமாற்றுவது மற்றும் 'தியேட்டர் கமாண்ட்' (Theater Command) அமைப்பை உருவாக்குவது இவரது முதன்மைப் பணியாக இருக்கும்.
இந்தியாவின் முதல் முப்படை தலைமை தளபதியாக ஜெனரல் பிபின் ராவத் இருந்தார். இவர் 2021 ஆம் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததை அடுத்து இரண்டாவது முப்படை தலைமை தளபதியாக 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி ஜெனரல் அனில் சவுகான் பொறுப்பேற்றார். இவரின் பதவிக்காலம் வரும் மே 30 அன்று முடிவடையும் சூழலில் தற்போது மூன்றாவது முப்படை தளபதியாக லெப்டினெண்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி நியமிக்கப்பட்டுள்ளார்.
நாட்டின் பாதுகாப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் பொறுப்பை ஏற்கும் தமிழர் என்.எஸ். ராஜா சுப்ரமணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















