நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

மத்திய அமைச்சரவையில் சில மாற்றம் ஏற்படப்போவதாக கூறப்படும் நிலையில், நிர்மலா சீதாராமன் வசமிருந்த நிதித்துறை மோடிக்கு நெருக்கமான நபருக்கு மாற்றப்படவிருப்பதாகவும், மொத்தமாக 5 பேர் அமைச்சரவையிலிருந்து நீக்கப்படவிருபாதகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் சமீபத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் திடீர் சந்திப்பு நடத்திய நாள் முதல், மத்திய அமைச்சரவையில் மாற்றம் ஏற்படப்போவதாக பேச்சு அடிபட்டன.

குறிப்பாக சிலர் அமைச்சர்கள் பதவியிலிருந்து நீக்கப்படவிருப்பதாகவும், சிலர் வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டு, புதிதாக சிலர் அமைச்சரவையில் சேர்க்கப்படவிருப்பதாகவும் கூறப்பட்டன.

ஷெஷல்ஸ் நாட்டுக்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மோடி, நாடு திரும்பியதும் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என்றும் சொல்லப்பட்டது.

இந்த நிலையில் மோடி ஷெஷல்ஸ் நாட்டு பயணத்தை முடித்து நேற்று டெல்லிக்கு புறப்பட்ட நிலையில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான சில முக்கிய தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன.

அதில், சமீபகாலமாக தொடர்ச்சியாக அரங்கேறும் வினாத்தாள் கசிவு காரணமாக, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உட்பட, ஹர்தீப் சிங் புரி, ரவ்நீத் பிட்டு, பங்கஜ் சவுத்ரி, ஹர்ஷ் மல்ஹோத்ரா ஆகியோர் பதவியிலிருந்து நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

முக்கியமாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தர்மேந்திர பிரதான் கவனித்து வந்த துறைக்கு மாற்றப்படவிருப்பதாகவும், முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநரும், பிரதமரின் முதன்மை செயலாளருமான சக்திகாந்த தாஸ் நிதியமைச்சராக்கப்படவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுமட்டுமல்லமால், பீகார் முன்னாள் முதல்வர் நிதிஷ் குமார் கைகாட்டும் ஒரு நபர், உத்தரப்பிரதேச எம்.பி-யும் ராமாயணம் சீரியலில் நடித்தவருமான அருண் கோவில், ஆம் ஆத்மியிலிருந்து பாஜக-வுக்கு வந்த ராகவ் சத்தா, அசோக் மித்தல் ஆகியோரில் ஒருவர், ஏக்நாத் ஷிண்டேவின் எம்.பி ஒருவர், பாஜக தேசிய பொதுச் செயலாளர் தருண் சுக் ஆகியோர் அமைச்சரவையில் சேர்க்கப்படலாம் என்று டெல்லி வட்டாரங்களில் பேச்சு அடிபடுகின்றன.

மொத்தமாக 5 பேர் பதவியிலிருந்து நீக்கப்படலாம் என்றும், 9 பேர் புதிதாக அமைச்சரவையில் இடம்பெறலாம் என்றும் கூறப்படுகிறது.

அடுத்த ஓரிரு நாள்களில் அமைச்சரவை மாற்றம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola