மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

Continues below advertisement

வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக திமுக-வை பாஜக அணுகியதாக தகவல் வெளியான நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் நாடாளுமன்றத்தில் தங்களின் நிலைப்பாடு தொடர்பாக கட்சி எம்.பி-க்களுடன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்புவரை திமுகவும், காங்கிரஸும் இந்தியா கூட்டணி மூலம் பாஜக-வை ஒன்றாக எதிர்த்து வந்தது.

ஆனால், சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும் காங்கிரஸ் திமுக-வுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு தவெக-வுடன் சேர்ந்து அமைச்சர் பதவி, ராஜ்யசபா எம்.பி சீட் என பலவற்றைப் பெற்றது.

இதனால், திமுக தலைமை காங்கிரஸ் மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகிறது. ஒருகட்டத்தில் இந்தியா கூட்டணியிலிருந்து திமுக வெளியேறிவிடும் என்ற பேச்சும் அடிபட்டது. அதற்கேற்றாற்போலவே, காங்கிரஸ் கட்சி பங்கேற்கும் கூட்டத்தில் திமுக இருக்காது என, கடந்த மாதம் நடைபெற்ற இந்தியா கூட்டணி கூட்டத்தை திமுக புறக்கணித்தது.

இந்த நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 20-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை தொடர்பான 131-வது அரசியல் சாசன திருத்த மசோதாவை மீண்டும் தாக்கல் செய்வதற்கான வேலையில் பாஜக தீவிரமாக இறங்கியுள்ளது.

இந்த மசோதாவானது பெண்களுக்கு 33 சதவிகிதி இட ஒதுக்கீட்டிற்கானது என கூறப்பட்டாலும், இதில் முக்கிய மையமாக இருப்பது தொகுதி மறுவரையறை தான். கடந்த முறை நாடாளுமன்றத்தில் இந்த மாசோதா தாக்கல் செய்யப்பட்டபோது காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஒருமித்த எதிர்ப்பால் மசோதா தோல்வியடைந்ததது.

தற்போது காங்கிரஸும், திமுக-வும் எதிரெதிராக இருப்பதால், மசோதாவை நிறைவேற்ற திமுகவிடம் பாஜக பேச்சுவார்த்தை நடத்தியதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் தான் தற்போது வெளிநாட்டில் இருக்கும் திமுக தலைவர் ஸ்டாலின், வரும் மழைக்கால கூட்டத் தொடரில் திமுகவின் நிலைப்பாடு தொடர்பாக கட்சி எம்.பி-க்களோடு காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தியிருக்கிறார்.   

இதனை தொடர்ந்து ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவில், "மேகதாது அணை கட்டும் முயற்சிகளுக்கு எதிராகவும், காவிரியில் தமிழ்நாட்டுக்கான நியாயமான உரிமையைக் காக்கவும் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரத்துக் குரலெழுப்புவார்கள். 

ஒன்றிய அரசு கொண்டு வரும் எந்தப் புதிய சட்டமாக இருந்தாலும் மாநில உரிமைகளையும் அரசியலமைப்புச் சட்டத்தினையும் பாதுகாத்திடும் வகையிலேயே திமுக-வின் நிலைப்பாடு இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற திமுக ஆதரவை பாஜக கேட்டதாக வெளியாகையிருக்கும் தகவலும், மறுபக்கம் அவசரமாக திமுக எம்.பி-க்களுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியதும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola