Congress: Delhi-க்கு படையெடுக்கும் தலைவர்கள் பதற்றத்தில் காங்கிரஸ்! இறங்கி அடிக்கும் ஆம் ஆத்மி!

டெல்லி தேர்தலில் மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், சரத் பவார் உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் முக்கிய புள்ளிகள் அரவிந்த் கெஜ்ரிவால் பக்கம் சாய்ந்திருக்கும் நிலையில், தங்களின் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று தங்கள் கட்சியின் முக்கிய தலைவர்களை பிரச்சார களத்தில் இறக்கியுள்ளது காங்கிரஸ்.
 
 
காங்கிரஸும் ஆம் ஆத்மியும் தேசிய அளவிலான கூட்டணியில் இருந்தாலும் டெல்லி சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைக்காமல் நேருக்கு நேர் மோதுகின்றன. மக்களவை தேர்தல் முடிந்ததில் இருந்தே இந்தியா கூட்டணியில் மாநில அளவில் விரிசல் விழுந்து வருகிறது. டெல்லி சட்டசபை தேர்தலில் இந்தியா கூட்டணியினர் காங்கிரஸை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மிக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.
 
திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆகியோர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு கொடுப்பதாக சொல்லியுள்ளனர். யார் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதோ அவர்களுக்கு தான் ஆதரவு கொடுப்போம் என கூட்டணியினர் சொல்லியுள்ளது காங்கிரஸ் கட்சியினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மகாராஷ்டிராவில் நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தலிலும் காங்கிரஸை கழற்றிவிட்டு உத்தவ் தாக்கரே தரப்பு சிவசேனாவும், சரத் பவார் தரப்பு தேசியவாத காங்கிரஸும் தனித்து களமிறங்க திட்டமிட்டுள்ளனர். இப்படி மாநில கட்சிகள் காங்கிரஸை ஓரங்கட்டி வருவது விவாதமாக மாறியுள்ளது.
 
மக்களவை தேர்தலுக்காக மட்டும் தான் இந்த கூட்டணி உருவாக்கப்பட்டதா என பாஜகவினர் ரவுண்டுகட்டி வருகின்றனர். கூட்டணி கட்சிகள் ஆம் ஆத்மிக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக காங்கிரஸ் பொது செயலாளர் கே.சி.வேணுகோபாலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு “இந்தியா கூட்டணியினரின் உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம். அதே நேரத்தில் இந்தியா கூட்டணிக்காக காங்கிரஸ் கட்சி எந்த அளவுக்கு தியாகம் செய்துள்ளது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என அதிருப்தி தெரிவித்துள்ளார்.
 
இச்சூழலில் தான் டெல்லி தேர்தலில் இந்திய கூட்டணியில் உள்ள தலைவர்கள் எல்லாம் ஆம் ஆத்மிக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி ஒரு புது ரூட்டை கையில் எடுத்திருக்கிறது. அதாவது தேசிய அளவில் தங்கள் கட்சியின் தலைவர்களை எல்லாம் டெல்லி அழைத்து பிரச்சாரம் செய்ய காங்கிரஸ் திட்டமிட்டிருப்பதகா தகவல் வெளியாகியுள்ளது. மறுபுறம் காங்கிரஸ் கட்சியின் இந்த செயல்பாட்டை ஆம் ஆத்மி கட்சியினர் கிண்டலடித்து வருகின்றனர். எங்களுக்கு பயந்து காங்கிரஸ் தேசிய தலைவர்களை பிரச்சாரத்திற்கு அழைத்து வருகிறது என்று கூறி வருகின்றனர்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola