Bihar | ராகுலை ஓரங்கட்டிய தேஜஸ்வி கடும் நெருக்கடியில் காங்கிரஸ்! எகிறி அடிக்கும் கூட்டணிக்கட்சிகள்
பீகார் தேர்தலில் மகாபந்தன் கூட்டணியில் தொகுதிபங்கீடு தொடர்பாக தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில், முதலமைச்சர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல், ராகுல் காந்திக்கான முக்கியத்துவத்தை குறைத்து பீகார் தேர்தலின் ஒற்றைமுகமாக நான் மட்டும் தான் இருக்க வேண்டும் என்பதிலும் விடாப்பிடியாக இருக்கிறாராம் தேஜஸ்வி யாதவ்.
பீகார் மாநிலத்தில் வரும் நவம்பர் 6 மற்றும் 11 தேதிகளில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இச்சூழலில் NDA கூட்டணி சார்பில் ஏற்கனவே தொகுதி பங்கீடு அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால், தேஜஸ்வி யாதவ் மற்றும் ராகுல் காந்தி இணைந்திருக்கும் மகாபந்தன் கூட்டணியில் இன்னும் தொகுதி பங்கீடு முடியவில்லை. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றும் காங்கிரஸ் கட்சி கேட்கும் தொகுதிகள் கிடைக்கவில்லை என்பதே இந்த இழுபறிக்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் தான் மகாபந்தன் கூட்டணி சார்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் கூட்டணி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளர். அதே நேரம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அசோக் கெலாட் இந்த நிகழ்வில் கலந்து கொண்டாலும் ராகுல் காந்தி கலந்து கொள்ளவில்லை. ஆரம்பத்தில் இருந்து பீகார் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 70 இடங்களுக்கு மேல் கேட்டு வருகிறது. ஆனால், தேஜஸ்வி யாதாவோ அதற்கு பிடி கொடுக்காமல் இருந்து வருகிறார். அதேபோல், மகாபந்தன் கூட்டணிக்குள்ளும் பல்வேறு பிரச்சனைகள் எழுந்து வருகிறது. அதாவது ராகுல் காந்தி தேஜஸ்வி யாதவை முதலமைச்சர் வேட்பாளர் என்பதை ஏற்றுக்கொள்ளும் மன நிலையில் இருந்தாலும் பீகார் காங்கிரஸ் கட்சியின் அதை ஏற்றுக்கொள்ளும் மன நிலையில் இல்லை என்ற்ய் சொல்லப்படுகிறது.
குறிப்பாக தேர்தல்தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே ராகுல் காந்தி பீகாருக்கு செல்லவில்லை என்றும் சொல்லப்படுகிறது. முன்னதாக வாக்கு திருட்டு தொடர்பாக பீகாரில் தான் பேசினார். அதேபோல், ஒரு சில முக்கிய நிகழ்வுகளையும் பீகாரில் இருந்து தான் தொடங்கினார். அதேபோல், வாக்களர் அதிகார யாத்திரையையும் பீகாரில் தான் தொடங்கினார்.
இந்த நிலையில் தான் கூட்டணி சார்பாக நடைபெறும் நிகழ்ச்சிகளில் ராகுல் கலந்து கொள்வதை புறக்கணித்து வருகிறார். அதேபோல், ராகுலின் புகைப்படங்கள் பேனர்களில் புறக்கணிக்கப்படுவதும் தேஜஸ்வி யாதவ் புகைப்படம் மட்டுமே முன்னிலைபடுத்தப்பட்டும் வருகிறது. இச்சூழலில் இன்று அவர் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் ராகுல் காந்திக்கான முக்கியத்துவத்தை குறைத்து பீகார் தேர்தலின் ஒற்றைமுகமாக நான் மட்டும் தான் இருக்க வேண்டும் என்பதை தேஜஸ்வி யாதவ் தெளிவுபடுத்தியுள்ளதாக சொல்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.





















