Tirupati laddu animal fat : ”திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு” சந்திரபாபு பகீர்
ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்பட்டதாக பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு.
ஆந்திர மாநிலம் அமராவதியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பங்கேற்றார். அப்போது பேசிய அவர், புகழ்பெற்ற திருப்பதி லட்டு பிரசாதத்தின் புனிதத்தன்மையை ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு கெடுத்து விட்டதாக விமர்சித்தார். பக்தர்களால் மிகவும் புனிதமானதாகக் கருதப்படும் திருப்பதி லட்டுகள், சுத்தமான நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பை பயன்படுத்தி கடந்த ஆட்சியில் தயாரிக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார். ஆனால் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு பிரசாதத்தின் தரத்தை மீட்டெடுத்துள்ளதாகவும், தற்போது தூய்மையான நெய்யை பயன்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.
அவரது குற்றச்சாட்டு சமூக வலைதளங்களில் விவாதமாக மாறியுள்ளது. புனிதமாக கருதப்படும் திருப்பதி லட்டுவில் இப்படியா என பலரும் கொந்தளித்து வருகின்றனர். ஆனால் இதற்கு ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் தரப்பில் இருந்து கடும் அதிருப்தி கிளம்பியுள்ளது. விஜயவாடா வெள்ளம் மீட்பு பணிகள் போன்றவற்றில் ஏற்பட்ட தோல்விகளை திசைதிருப்பவே, தற்போது திருமலா பிரசாதம் குறித்து அவதூறு பரப்பப்படுவதாக ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் தரப்பில் இருந்து பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்துக்களின் நம்பிக்கையை அவமதிக்கும் வகையில் சந்திரபாபு நாயுடு நடந்து கொள்வதாகவும், அரசியலுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாமா என்றும் அக்கட்சியினர் கொந்தளித்து வருகின்றனர்.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் தலைவர் பூமனா கருங்கர் ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருமலையின் பிரசாதங்கள் குறித்து ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபுவின் குற்றச்சாட்டுகள் மிகவும் மோசமானவை. கடவுளை அரசியல் ஆதாயத்துக்காக மட்டும் பயன்படுத்தினால் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறுபவர்களை கடவுள் மன்னிக்க மாட்டார். அரசியல் எதிரிகளை கடவுளின் பெயரால் குற்றம் சாட்டுவது சந்திரபாபுவுக்கு புதிதல்ல” என்று விமர்சித்துள்ளார்.
முதலமைச்சரே இப்படி ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது பக்தர்கள் மத்தியிலும் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.