AI Summit 2026 | இந்தியா மானமே போச்சு.. AI மாநாட்டில் சீன ரோபோ! சீட்டிங் செய்த உ.பி UNIVERSITY

Continues below advertisement

டெல்லியில் மோடி தொடங்கி வைத்த AI உச்சி மாநாட்டில் இந்திய பல்கலைக்கழகம் ஒன்று சீனா ரோபோட்டிக் நாயை தங்களின் தயாரிப்பு என்று கூறி இந்தியாவின் மானத்தை காற்றில் பறக்கவிட்டிருக்கிறது. இதனால் பாஜக அரசைப் பலரும் கடுமையாக விமர்சித்திருக்கின்றனர்.


தேசிய தலைநகர் டெல்லியில் முதல்முறையாக இந்தியா சார்பில்  AI இம்பேக்ட் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 20-ம் தேதி வரை 5 நாள்கள் நடக்கும் இந்த மாநாட்டை பிப்ரவரி 16-ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட இந்த மாநாட்டில் தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழில்துறை நிறுவனர்கள், மாணவர்கள் பலர் கலந்துகொள்கின்றனர். இந்த நிலையில், இந்த மாநாட்டில் இந்திய பல்கலைக்கழகம் ஒன்றின் செயல் உலக அரங்கில் நாட்டுக்கே அவமரியாதையை ஏற்படுத்தியிருக்கிறது.

அதாவது, இந்த மாநாட்டில் நொய்டாவைச் சேர்ந்த கல்கோடியாஸ் பல்கலைக்கழகத்துக்கு அரங்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த அரங்கில் ரோபோட்டிக் நாய் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது.

மேலும், இந்த ரோபோட்டிக் நாய் குறித்து கல்கோடியாஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நேஹா சிங்க், ``இந்த ரோபோட்டிக் நாயின் பெயர் ஓரியன். இது கல்கோடியாஸ் பல்கலைக்கழகத்தின் Centre of Excellence குழுவால் தயாரிக்கப்பட்டது" என்று இந்திய அரசு ஊடகமான தூர்தர்ஷனிடம் தெரிவித்திருந்தார்.

மறுபக்கம், மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் இந்த ரோபோட்டிக் நாய் விடியோவை எக்ஸ் தளத்தில் ஷே செய்து, ``சர்வதேச தரத்தில் நம் பாரத் மாடல்கள் சிறப்பாக செயல்படுகின்றன" என்று பெருமிதமாகப் பதிவிட்டிருந்தார்.

ஆனால், இந்த ரோபோட்டிக் நாயின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான பிறகுதான், அது இந்தியாவில் தயாரிக்கப்பட்டது அல்ல, சீனாவின் Unitree Robotics என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது என்று தெரியவந்தது. உடனே, மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் தான் பதிவிட்ட வீடியோவையும் நீக்கிவிட்டார். Unitree Go2 என்ற இந்த ரோபோட்டிக் நாய் உலகளவில் ஆராய்ச்சி மற்றும் கல்வியில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதனால் சமூக வலைத்தளங்களில் சீனா ஊடகங்கள் உட்பட பலரும், `இந்திய பல்கலைக்கழகம் சீனாவின் ரோபோவை தங்களின் தயாரிப்பு என்று காட்சிப்படுத்தியிருக்கிறது' என்று விமர்சிக்கத் தொடங்கினர்.

குறிப்பாகக் காங்கிரஸ், ``மோடி அரசு AI விஷயத்தில் இந்தியாவை உலக அளவில் கேலிக்குள்ளாக்கியிருக்கிறது. சீனா ஊடகங்கள் நம்மைக் கேலி செய்கின்றன. இது உண்மையிலேயே இந்தியாவுக்கு சங்கடமானது.

அதிலும், மோடியின் அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இந்த சீனா ரோபோவை விளம்பரபடுத்தியது இன்னும் வெட்கக்கேடு. நாட்டின் பிம்பத்துக்கு சரிசெய்ய முடியாத சேதத்தை மோடி அரசு ஏற்படுத்தியிருக்கிறது" என்று பாஜக அரசை கடுமையாக விமர்சித்தது.

இந்த விவகாரம் பெரிதாக வெடித்தால் சம்பத்தப்பட்ட கல்கோடியாஸ் பல்கலைக்கழகம், ``அந்த ரோபோட்டை நாங்கள் உருவாக்கவில்லை. அதற்கு நாங்கள் உரிமைகோரவும் இல்லை" என்று நேற்று அறிக்கை வெளியிட்டது.

இருப்பினும், மாநாட்டில் பல்கழகத்தின் அரங்கு பார்வையளர்களுக்கு திறந்துவைக்கப்பட்டிருந்ததால் ஊடகங்கள் இதுபற்றி கேள்விகள் எழுப்பின. அதிலும், அரங்கை மூடிவிட்டு செல்லுமாறு பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டதாகவும், ஆனாலும் அவர்கள் வெளியேறாததால் மின்சாரம் ஒப்பில்லா வசதிகள் துண்டிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகின.

இந்த நிலையில், பிரதமர் மோடி, கூகுள் CEO சுந்தர் பிச்சை, Open AI CEO சாம் ஆல்ட்மேன் உள்ளிட்டோர் நாளை இந்த மாநாட்டுக்கு வரவிருக்கும் நிலையில், கல்கோடியாஸ் பல்கலைக்கழகம் நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டு அரங்கத்தைக் காலி செய்திருக்கிறது.

இதுகுறித்து பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்ட அறிக்கையில், ``AI உச்சி மாநாட்டில் ஏற்பட்ட குழப்பத்துக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். அங்கிருந்த எங்களின் பிரதிநிதிக்கு தவறான தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அந்த ரோபோட்டிக் தயாரிப்பு பற்றி விவரம் அவருக்குத் தெரியாது. பத்திரிகையாளர்களிடம் பேசுவதற்கு அவருக்கு அனுமதி வழக்கப்படாதபோதும், கேமரா முன் ஒரு ஆர்வத்தில் உண்மைக்கு மாறான தகவல்களைக் கூறிவிட்டார்.

இந்தக் கண்டுபிடிப்பை தவறாகச் சித்தரிக்க எங்களுக்கு எந்த நோக்கமும் இல்லை என்பதால் இதைப் புரிந்துகொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். மாநாடு ஏற்பாட்டாளர்களின் உணர்வைப் புரிந்துகொண்டு அரங்கை நாங்கள் காலி செய்துள்ளோம்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola