”ஓசூருக்கு எதுக்கு AIRPORT?”தட்டித்தூக்கிய நாயுடு பின்னணியில் மோடி?
ஓசூரில் திமுக அரசு கொண்டுவரத் திட்டமிட்ட சர்வதேச விமான நிலையத்தை சந்திரபாபு நாயுடு மத்திய அரசின் துணையோடு தனது மாநிலத்துக்கு தட்டித் தூக்கிவிட்டார். 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு தென்னிந்தியாவில் பெருநிறுவனங்களின் முதலீடுகள் பாஜக-வின் கூட்டணி கட்சி ஆளும் ஆந்திராவுக்கு சென்றுவரும் நிலையில் தற்போது ஓசூர் அமையவிருந்த விமான நிலையமும் ஆந்திராவுக்குச் சென்றிருக்கிறது.
கடந்த 2021-ல் ஆட்சிக்கு வந்த திமுக ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கத் திட்டமிட்டது. அதற்காக ஆந்த ஆண்டின் இறுதியில் ஓசூரில் விமான நிலையம் அமைக்கச் சாத்தியமான இடங்களைத் தேர்வு செய்ய ஆலோசகர்களையும் அழைத்துப் பேசியது. அதன்பின்னர், கடந்த 2024 ஜூன் மாதம் முதல்வர் ஸ்டாலின், ``ஓசூரில் ஆண்டுக்கு 30 மில்லியன் பயணிகள் பயன்பெறும் வகையில் 2,000 ஏக்கரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும்" என்று சட்டமன்றத்தில் அறிவித்தார். தமிழ்நாட்டின் தொழிற்துறை நகரங்களில் ஒன்றாக அறியப்படும் ஓசூரில் சர்வதேச விமான நிலையம் வந்தால் ஏற்றுமதிக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் மிக முக்கியாமானதாக இருக்கும் என்று பார்க்கப்பட்டது.
ஆனால், ஒசூரிலிருந்து 75 கி.மீ தூரத்தில்தான் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் இருப்பதால் இதற்கு சிக்கல் வந்தது. அதவாது, 2008-ல் கெம்பேகவுடா விமான நிலையம் அமைக்கப்பட்டபோது, மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகத்துக்கும், விமான நிலையத்துக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. 2033 வரை கெம்பேகவுடா விமான நிலையத்தைச் சுற்றி 150 கி.மீ தொலைவில் எந்தப் புதிய விமான நிலையமும் அமைக்கக் கூடாது என்பதுதான் அந்த ஒப்பந்தம்.
இதனால், தமிழக அரசு விமான நிலையம் கட்ட மத்திய அரசிடம் முதலில் அனுமதி பெற்று, 2033-ல் பயன்பாட்டுக்கு கொண்டு வரலாம் என திட்டமிட்டது. அதன்படி தமிழக அரசு ஓசூரில் வான்வெளி அனுமதி கோரி மத்திய பாதுகாப்புத்துறையிடம் விண்ணப்பித்தது. ஆனால் மத்திய அரசோ, ``ஓசூர் வான்வெளி பகுதியில்தான் இந்திய அரசின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு ராணுவ விமானங்கள், ஹெலிகாப்டர்கள் சோதனை செய்யப்படுகின்றன. எனவே விமான நிலையத்துக்கு இங்கு அனுமதியளித்தால் பாதுகாப்பு சிக்கல் வரக்கூடும்" என்று அனுமதி மறுத்தது.
இதனை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பாஜக-வின் துணையோடு தனக்கு சாதகமாக்கிக் கொண்டார். மத்தியில் தனிப்பெரும்பான்மை இழந்த பாஜக-வுக்கு தெலுங்கு தேசம் கட்சி கைகொடுத்ததால் அக்கட்சிக்கு மோடி அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டது. குறிப்பாக 36 வயதேயான தெலுங்கு தேசம் எம்.பி ராம் மோகன் நாயுடுவுக்கு மத்திய விமான போக்குவரத்துத் துறை ஒதுக்கப்பட்டது.
இந்த நிலையில், ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு, தனது மாநிலத்தில் விமான நிலைய உட்கட்டமைப்பை விரிவாக்கம் செய்ய உயர்மட்ட கூட்டம் நடத்தினார். இதில், மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, விமான நிலைய ஆணைய மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர். அக்கூட்டத்தில்,குப்பம் பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்கான பணிகளை ஆந்திர அரசு தொடங்கியிருக்கிறது. இதற்கென்று 1250 ஏக்கர் நிலையம் கண்டறியப்பட்டு அறிக்கை தயார் செய்யப்பட்டிருக்கிறது. இப்பணிகள் 2027-ல் முடிவுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இவ்வாறு, ஓசூருக்கு வரவேண்டிய விமான நிலையத்துக்கு பாஜக அரசு வேண்டுமென்றே அனுமதி மறுத்து, தனது கூட்டணி கட்சி ஆளும் ஆந்திராவுக்கு மாற்றியிருக்கிறது. இதன் மூலம், எதிர்க்கட்சிகளின் ஆட்சி நடைபெறும் மாநிலங்களின் வளர்ச்சியைத் தடுக்க அம்மாநிலங்களை வேண்டுமென்றே பாஜக அரசு புறக்கணிக்கிறது என்று குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.