Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி

மகாராஷ்டிராவில் அனுமன் கோயில் மண்டப கூரை இடிந்து விழுந்ததில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர வைத்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் பர்பானி மாவட்டத்தில் உள்ள யாஷ்வாடி கிராமத்தில் அனுமன் கோயில் ஒன்றில் கட்டுமானப் பணி நடந்து வருகிறது. பணிக்கு நடுவே பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று சனிக்கிழமை என்பதால் அனுமன் கோயிலில் கூட்டமும் அதிகமாக இருந்துள்ளது. இந்தநிலையில் கட்டுமான பணியில் இருந்து மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து சம்பவம் பக்தர்களை அதிர்ச்சியடைய வைத்தது. தகவலின் பேரில் மீட்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

ஆனால் இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பக்தர்களின் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். பிரதமர் மோடியும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதிக எடையுள்ள மிகப்பெரிய ராஜஸ்தானி கற்கள் தான் கோயிலின் கட்டுமான பணிக்கு பயன்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கட்டுமான பணி நடைபெற்றாலும் கோயிலில் தரிசனத்திற்காக அனுமதிக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் கேட்டுக் கொண்டதால் தான் கோயில் திறக்கப்பட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளனர். இருந்தாலும் முறையான பாதுகாப்புகள் இல்லாமல் பக்தர்களை அனுமதித்தது ஏன் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. 

பக்தர்கள் மீது மண்டப கூரை இடிந்து விழும் பகீர் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola