”இன்னைக்கு வரை தான் TIME SP வேலுமணி TEAM காலக்கெடு! என்ன செய்யப்போகிறார் EPS?

Continues below advertisement

அதிமுக MLA-க்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்துவிட்டு தவெகவுக்கு தாவி வரும் நிலையில், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 16 MLA-க்கள் சில கண்டிஷன்களை போட்டு இன்று மாலைக்குள் முடிவை சொல்ல வேண்டும் என இபிஎஸ்-க்கு காலக்கெடு விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுக MLA-க்கள் 25 பேர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தனர். அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்-க்கு எதிராக போர்க்கொடியும் தூக்கியுள்ளனர். அதனால் உடனடியாக அவர்களுடைய கட்சிப் பதவிகளை பறித்தார் இபிஎஸ். ஆனால் கட்சியும் சின்னமும் உங்கள் அணிக்கு தான் என்பதை நிரூபிக்காமல் அமைச்சரவையில் இடம் கொடுக்க முடியாது என முதலமைச்சர் விஜய் கைவிரித்துவிட்டதால் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி அணி.

ஏற்கனவே விஜய்க்கு ஆதரவு தெரிவித்த அதிமுக MLAக்கள் 3 பேர் பதவியை ராஜினாமா செய்த கையோடு அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை சந்தித்து தவெகவில் இணைந்தனர். அடுத்ததாக அம்பாசமுத்திரம் அதிமுக MLA இசக்கி சுப்பையாவும் பதவியை ராஜினாமா செய்து பரபரப்பை கிளப்பியுள்ளார். 

இந்தநிலையில் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 16 MLA-க்கள் இபிஎஸ் இன்று மாலைக்குள் தன்னுடைய முடிவை சொல்ல வேண்டும் என காலக்கெடு விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தவெகவில் அமைச்சரவை கிடைக்காத நிலையில் மீண்டும் அதிமுக பக்கம் செல்ல வேண்டும் என்பதே எஸ்.பி.வேலுமணி அணியின் நினைப்பாக இருப்பதாக சொல்கின்றனர். ஆனால் இபிஎஸ் தங்களை ஓரங்கட்டிவிடுவாரோ என்ற பயத்தில் ஆரம்பத்திலேயே டிமாண்ட் வைத்து கட்சியில் தங்களுக்கான இடங்களை பிடித்துவிட வேண்டும் என நினைப்பதாக கூறப்படுகிறது. 

அதாவது தங்களிடம் இருந்து பறித்த பதவிகளை மீண்டும் கொடுப்பது, தேர்தல் தோல்விக்கான காரணத்தை ஆராய குழு அமைப்பது, பொதுக்குழுவை கூட்டுவது, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சிலரை மீண்டும் சேர்ப்பது என சில கண்டிஷன்களை போட்டுள்ளனர். இதுபற்றி தான் இபிஎஸ் முடிவெடுப்பதற்கு காலக்கெடு விதித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அப்படி இல்லையென்றால் நாங்கள் அனைவரும் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துவிடுவோம் என எச்சரிக்கும் வகையிலான சம்பவங்களே தற்போது நடந்து கொண்டிருக்கின்றன. 

மற்றொரு பக்கம் இபிஎஸ் இதற்கெல்லாம் இறங்கி வருவாரா என்ற கேள்வி இருக்கிறது. ஏற்கனவே விஜய்க்கு ஆதரவு தெரிவித்த அதிமுகவினர் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  இபிஎஸ் சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தார். அதேபோல் தற்போது MLA-க்களின் ராஜினாமாவை ஏற்கக் கூடாது என்றும் இபிஎஸ் தரப்பில் இருந்து தளவாய் சுந்தரம், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ஓ.எஸ்.மணியன், இன்பதுரை ஆகியோர் சபாநாயகரை சந்தித்து கடிதம் கொடுத்துள்ளனர்.

அதிமுக 2 அணியாக உடைந்து கிடக்கும் நிலையில் இபிஎஸ் என்ன முடிவெடுக்கப் போகிறார்? எஸ்.பி.வேலுமணி அணி அதிமுகவிலேயே மீண்டும் பதவி வாங்கி உட்கார போகிறார்களா அல்லது தவெக பக்கம் சாயப் போகிறார்களா என்ற விவாதம் நடந்து வருகிறது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola