DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE

தவெக MLA-வை அந்தக் கட்சியில் இருந்து தூக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிடும் IPDS அமைப்பின் திருநாவுக்கரசை திடீரென கைது செய்திருக்கிறது சென்னை மாநகர போலீஸ். தவெக எம்.எல்,ஏக்களை பேரம் பேசி அவர்கள் மூலம் ஆட்சியை கவிழ்க்க செந்தில் பாலாஜி திட்டம் தீட்டி வருவதாக உளவுத்துறை கவனத்திற்கு சென்றதாகவும் சொல்கின்றனர்.  

தவெகவுக்கு தனிப்பெரும்பானை கிடைக்காத நிலையில் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியமைத்துள்ளது. ஆனால் தங்களிடம் தனிப்பெரும்பான்மை இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறார் முதலமைச்சர் விஜய். அதற்காக அதிமுகவில் இருந்து அடுத்தடுத்த பெருந்தலைகளுக்கு சிறு தூண்டில் வீசி தவெகவை நோக்கி இழுத்து வரும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை அதிமுக MLA-க்கள் 6 பேர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனர்.

அதே நேரத்தில் தவெக ஆட்சியை கவிழ்க்கவும் தொடர்ந்து சதி நடைபெற்று வருவதாக ஆதவ் அர்ஜூனா, சிடிஆர் நிர்மல்குமார் போன்றோர் திமுக – அதிமுக மீது பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி என்ற விஜயின் திட்டத்திற்கு தீ வைக்கும் முடிவில் சிலர் இறங்கியிருப்பதாகவும் அவர்கள் தவெக எம்.எல்.ஏக்களுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி, பணத்தாசை காட்டி வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த விவகாரத்தை உளவுத்துறை மிகத் தீவிரமாக விசாரித்து வரும் நிலையில்தான் கருத்துக் கணிப்புகளை வெளியிடும் அமைப்பின் தலைவரான திருநாவுக்கரசு நேற்று சென்னை போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

நேற்று தன்னுடைய கணவரை போலீசார் கடத்தி சென்றுவிட்டதாக அவரது மனைவி அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில், இன்று திருநாவுக்கரசு கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கைது செய்யப்பட்டதற்கான காரணம் குறித்தும் விளக்கத்தை கொடுத்துள்ளனர். அதில், ஊத்தங்கரை தொகுதி தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ இளையராஜா-விடம் பணத்தாசை காட்டி, திருநாவுக்கரசு பேரம் பேசியதாகவும், அவரை தவெக எம்.எல்.ஏ பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வைத்து வேறு ஒரு கட்சிக்கு கொண்டுச் சேர்க்கும் திட்டத்தை அவர் செயல்படுத்த முயற்சித்ததாகவும் கூறப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக எம்.எல்.ஏ இளையராஜாவே கொடுத்த புகாரின் அடிப்படையில் திருநாவுக்கரசை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்திருப்பதாகவும் போலீஸ் வட்டாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

ஆனால் திருநாவுக்கரசு கைது செய்யப்பட்டிருப்பது குறித்தோ, அவர் மீதான புகார் பற்றியோ காவல்துறை இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் இதுவரை வெளியிடவில்லை. இந்நிலையில், தவெக எம்.எல்,ஏக்களை பேரம் பேசி அவர்கள் மூலம் ஆட்சியை கவிழ்க்க திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் அணியினர் தீவிரமாக திட்டமிட்டு வருவதாகவும் இதனை கண்டுபிடித்த உளவுத்துறையினர் அசோக்கை தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த திமுக நிர்வாகிகள் இரண்டு பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola