உதயநிதி முன் தள்ளுமுள்ளு! போர்வையை இழுத்த பெண்கள்! கோபத்தில் கத்திய POLICE
துணை முதல்வர் நிவாரண பொருட்களை வழங்கி கொண்டிருக்கும் போதே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். உதயநிதி நகர்ந்து சென்றதும் பெண்கள் போட்டி போட்டுக் கொண்டு போர்வையை இழுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கனமழையால் தர்மபுரி மாவட்டம் அரூர் ஒட்டியுள்ள வாணியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதனால் மக்கள் உடனடியாக மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், போர்வை அடங்கிய நிவாரண பொருட்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். உதயநிதி காரில் வரும் போதே மனுக்களை கொடுப்பதற்காக குவிந்தனர். முகாமிற்குள் நுழையும் போது கட்சி நிர்வாகிகள் மற்றும் மக்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
உதயநிதி நிவாரண பொருட்களை கொடுத்துக் கொண்டிருக்கும் போதே மக்கள் முண்டியடித்துக் கொண்டு போலீசாரையும் மீறி உள்ளே வர பார்த்தனர். மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசாரும் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். உதயநிதி முகாமில் இருந்து கிளம்பிய உடனேயே பெண்கள் போர்வையை இழுத்து சென்றதால் காவல்துறையினரும் அரசு அதிகாரிகளும் சத்தமிட்டனர். கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு போட்டி போட்டுக் கொண்டு வந்ததால் அந்த இடத்தில் பரபரப்பாக சூழல் நிலவியது.