Cuddalore Sewage worker : எது மாறினாலும் இது மாறல.. கழிவுநீர் சாக்கடையில் மனிதன்! தொடரும் அவலம்!
கடலூரில் எந்த பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் தொழிலாளர் ஒருவர் கழிவுநீர் சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றுவது குற்றம் என்ற போதிலும், தமிழ்நாட்டில் இந்த அவல நிலை தொடர்வதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.
கடலூர் மாநகராட்சியில் மொத்தம் 45 வார்டுகள் உள்ளன. பல்வேறு இடங்களில் கழிவுநீர் சாக்கடையில் அடைப்புகள் ஏற்பட்டு கழிவுநீர் சாலைகளிலும், தெருக்களிலும் குடியிருப்பு பகுதிகளிலும் சூழ்ந்துள்ளதாக புகார் எழுந்தது. மாநகராட்சிக்கு புகார் கொடுத்த நிலையில் மாநகராட்சி சார்பில் இந்த அடைப்பை சரிசெய்யும் பணியில் ஒப்பந்த ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இந்த தொழிலாளர்கள் எந்த பாதுகாப்பு உபகரணமும் கழிவுநீர் சாக்கடைக்குள் மூழ்கி சுத்தம் செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாநகராட்சியில் கழிவுநீர் சாக்கடையை சுத்தம் செய்யும் உபகரணங்கள் இல்லையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. கழிவுநீர் சாக்கடையில் சுத்தம் செய்யும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவதால் உயிரிழப்புகள் ஏற்படுவதால், இந்த அவல நிலையை ஒழிக்க வேண்டும் என்று பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் கையால் மனிதக் கழிவுகளை அகற்றுவது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறையோ அல்லது 1 லட்சம் அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படும்.
கடலூரில் கழிவுநீர் சாக்கடையை ஊழியர் சுத்தம் செய்யும் வீடியோ வைரலான நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். கடந்த 2018 – 2022 வரையிலான ஐந்து ஆண்டுகளில், நாட்டிலேயே அதிகமாக, 52 கழிவு நீர் அகற்றும் தொழிலாளர்கள் பலியான அவலம் தமிழகத்தில்தான் ஏற்பட்டது. ஆனால், அதன் பின்னரும், தமிழகத்தில், மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் தீராத அவலம் தொடர்வது வேதனைக்குரியது என கூறியுள்ளார். தூய்மை பணியாளர்களுக்கான மத்திய அரசின் திட்டங்கள் எதையும் செயல்படுத்தாமல் திமுக அரசு புறக்கணித்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.