
LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்
கடலூரில் லிஃப்டில் சிக்கிய காங்கிரஸ் எம்பியை ஒரு மணி நேர போராடி லிஃப்ட்டை உடைத்து மீட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் வடலூர் அடுத்த இந்திரா நகர் பகுதியில் உள்ள தங்கும் விடுதியின் இரண்டாவது தளத்தில் காங்கிரஸ் கமிட்டியின் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கடலுார் தொகுதி காங்கிரஸ் எம்.பி., விஷ்ணு பிரசாத் வந்துள்ளார். அப்போது விடுதியில் இருந்த லிஃப்ட்டில் எம்.பி விஷ்ணு பிரசாத் உள்ளிட்ட 6 பேர் ஏறியுள்ளனர்.
அந்த லிப்டில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இதுவரை மூன்று பேர் மட்டுமே சென்று வந்துள்ளனர். இது தெரியாமல் 6 பேர் ஏறிவிட்டதால் லிஃப்ட் பழுதடைந்து நின்றுள்ளது. எம்.பி உள்ளிட்டோர் உள்ளே மாட்டிக் கொண்டதால் உடனடியாக அங்கிருந்தவர்கள் லிஃப்ட்டை திறக்க எவ்வளவு முயற்சித்தும் முடியாமல் போனது. அதனால் குறிஞ்சிப்பாடி வடலூர் நெய்வேலி உள்ளிட்ட இடங்களைச் சார்ந்த தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரமாக போராடி லிஃப்ட்டை உடைத்து உள்ளே இருந்தவர்களை பத்திரமாக மீட்டனர். லிப்டில் இருந்த ஆறு பேரில் இருவர் மயக்கம் அடைந்த நிலையில் உடனடியாக மருத்துவமனை அழைத்துச்சென்று முதலுதவி அளிக்கப்பட்டது. ஒரு மணி நேரமாக எம்.பி உள்ளிட்டோர் சிக்கியிருந்ததால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.