காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில், திமுக பெண் கவுன்சிலர்கள் காங்கிரஸ் பெண் கவுன்சிலரின் சீலையை இழுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் பிரபாகரன், ரமேஷ், மற்றும் ஷர்மிளா சந்திரசேகர் ஆகியோர், குடிநீர் தட்டுப்பாட்டைக் கண்டித்தும், சீரான குடிநீர் வினியோகத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தியும், காலி குடங்களுடன் மாமன்ற வாசலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து மாமன்றத்தில் கூட்டம் தொடங்கியதும், வார்டுகளில் நடைபெறும் எந்தவொரு மக்கள் நலப்பணிகள் குறித்தும் தங்களுக்குத் தகவல் தெரிவிப்பதில்லை என கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர்.
மேலும், அதிகாரிகள் தன்னிச்சையாகச் செயல்படுவதாகக் கூறி, திமுக மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் இருதரப்பும் இணைந்து, மேயரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதே நேரத்தில் காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி, கடந்த திமுக ஆட்சியில் செம்மொழி பூங்கா அமைப்பதில் 40 கோடி ரூபாய் ஊழல் மற்றும் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகக் கூறி, அதுகுறித்து பதிலளிக்குமாறு மேயர் ரங்கநாயகியை முற்றுகையிட்டு கோரிக்கை விடுத்தார்.
இதனால் காங்கிரஸ் கவுன்சிலர்களுக்கும் திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.
அப்போது திமுக பெண் கவுன்சிலர்கள், காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரியின் சீலையை பிடித்து இழுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி அதனையும் மீறி மேடையில் ஏறி நின்று மாநகராட்சி ஆணையருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், இச்சம்பவத்தைக் கண்டித்து காங்கிரஸ் உறுப்பினர் காயத்ரி கண்ணீருடன் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தார்.
இதனைத் தொடர்ந்து, காயத்ரி மற்றும் கம்யூ., கவுன்சிலர்கள் ராமமூர்த்தி, பூபதி, பிரபா, சாந்தி ஆகிய 5 பேரை 2 மாதம் சஸ்பெண்ட் செய்வதாக மேயர் அறிவித்தார்.
கோவை மாமன்ற கூட்டத்தில் நடந்த இச்சம்பவமானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.