Annamalai 2026 election | அரவக்குறிச்சிக்கு NO! தொகுதி மாறும் அண்ணாமலை? பாஜகவின் கொங்கு கணக்கு
2021 தேர்தலில் பள்ளப்பட்டி காலைவாரிவிட்டதால் இந்த முறை அரவக்குறிச்சியை விட்டுவிட்டு கொங்கு மண்டலத்தில் வேறு தொகுதியை அண்ணாமலை குறிவைத்துள்ளதாக பேச்சு அடிபடுகிறது.
2021 சட்டப்பேரவை தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை திமுக வேட்பாளர் இளங்கோவிடம் தோல்வியடைந்தார். திமுகவின் இளங்கோ 93,336 வாக்குகளும் பாஜகவின் அண்ணாமலை 68,553 வாக்குகளும் பெற்றிருந்தனர். அரவக்குறிச்சி தொகுதி வெற்றியை தந்துவிடும் என எதிர்பார்த்த அண்ணாமலைக்கு இந்த தொகுதியில் உள்ள பள்ளப்பட்டி சறுக்கலை கொடுத்தது. பள்ளப்பட்டி நகராட்சியில் மட்டும் 30,000க்கும் அதிகமான இஸ்லாமியர் வாக்குகள் இருக்கின்றன.
தேர்தல் பிரசாரத்தின்போது, பள்ளப்பட்டி ஜமாத்துக்கும் அண்ணாமலைக்கும் இடையே உரசல்கள் வெளிப்பட்டன. இதுபற்றி பேசிய அண்ணாமலை, `பள்ளப்பட்டிக்குள் பா.ஜ.க வாகனம் செல்லும். எங்களுக்கு ஜமாத் உள்பட யாருடைய அனுமதியும் வேண்டாம். நாங்கள் பிரசாரம் செய்வோம். பள்ளபட்டி இந்தியாவில்தான் இருக்கிறது என்று சொன்னது சர்ச்சையில் சிக்கியது.
2021 தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது ஆரம்பத்தில் முந்தி சென்ற அண்ணாமலை பள்ளப்பட்டி பகுதி வாக்குகள் எண்ணும் போது பின்னோக்கி சென்றார். அதனால் அண்ணாமலையின் தோல்விக்கு பள்ளப்பட்டி முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதேபோல் கொங்கு மண்டலத்தில் செல்வாக்குடன் வலம் வரும் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வைத்ததும் பள்ளப்பட்டியில் வாக்குகள் குறைந்ததற்கான காரணமாக பேச்சு அடிபட்டது.
இந்தநிலையில் 2026 தேர்தலில் அண்ணாமலை அரவக்குறிச்சி தொகுதியை விட்டுவிட்டு கொங்கு மண்டலத்தில் வேறு தொகுதியில் போட்டியிடலாம் என அண்ணாமலை முடிவெடுத்துள்ளதாக சொல்கின்றனர். திருப்பூர் அல்லது கோவை மாவட்டத்தில் உள்ள சில தொகுதிகள் லிஸ்ட்டில் இருப்பதாக சொல்கின்றனர். கோவையை குறிவைத்து காய் நகர்த்தி வரும் பாஜக, அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி சில தொகுதிகளை பேசி முடிக்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மற்ற பகுதிகளை ஒப்பிடுகையில் கொங்கு மண்டலம் பாஜகவுக்கு சாதகமாக அமையும் என நினைக்கின்றனர்.
2021 சட்டப்பேரவை தேர்தல் மற்றும் மக்களவை தேர்தலில் கொங்கு மண்டலத்தில் அண்ணாமலைக்கு தோல்வி கிடைத்த நிலையில், வரும் தேர்தலில் தொகுதியை பார்த்து டிக் அடிக்க முடிவெடுத்துள்ளதாக பேச்சு அடிபடுகிறது.