"1000 ரூபாய்க்கே இழுத்தடிக்கிறீங்க இதுதான் மாற்றமா" முதல்வரை விளாசிய ஸ்டாலின்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை மறு சீரமைப்பு செய்ய கால அவகாசம் தேவைப்படுவதாக முதல்வர் விஜய் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், "மாசம் 2,500 ரூபாய்னு சொல்லிட்டு, ஆயிரம் ரூபாய் கூட தராம இழுத்தடிக்கிறதுதான் உங்க மாற்றமா?" என்று முன்னாள் முதல்வர் ஸ்டாலின் விமர்சித்திருக்கிறார்.
கடந்த 2021 தேர்தலின்போது, திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார்.
அதன்படி ஆட்சிக்கு வந்த திமுக, ஒன்றரை வருடம் கழித்து கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என்ற பெயரில், தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் வழங்கத் தொடங்கியது.
இவ்வாறிருக்க, தற்போது நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், தவெக ஆட்சிக்கு வந்தால் "மதிப்புமிகு மகளிர் திட்டம்" என்ற திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2,500 ரூபாய் வழங்கப்படும் என்று விஜய் அறிவித்தார்.
இவ்வாறிருக்க, விஜய் முதல்வராகப் பதவியேற்ற நாள் முதல் இந்தத் திட்டம் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என்று பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
இதற்கு மத்தியில், ஏற்கெனவே குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் 1,000 ரூபாயை தொடர்ந்து வழங்க வேண்டும் என்று திமுக வலியுறுத்தியது.
இது மாதந்தோறும் சரியாக 15-ம் வழங்கப்பட்டு வரும் நிலையில், "பெண்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய அரசுக்கு கால அவகாசம் தேவைப்படுவதாகவும், அதனால் மே மாதத்துக்கான தொகை விரைவில் வழங்கப்படும் என்றும் முதல்வர் விஜய் இன்று அறிவித்தார்.
இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் எக்ஸ் தளப் பக்கத்தில், "மே மாசத்துக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை 15-ஆம் தேதி வரவு வைக்கணும்.
ஏற்கனவே உள்ள திட்டத்தைத் தொடர இப்ப எதுக்கு அவகாசம்? என்ன மறுசீரமைப்பு பண்ண போறீங்க?
திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடரும்னு நேத்துதான சட்டப்பேரவையிலயே சொன்னீங்க?
மாசம் 2,500 ரூபாய்னு சொல்லிட்டு, ஆயிரம் ரூபாய் கூட தராம இழுத்தடிக்கிறதுதான் உங்க மாற்றமா?" என்று கேள்வியெழுப்பியிருக்கிறார்.
ட்ரெண்டிங் செய்திகள்





















