ரூ.3 லட்சம் ஜீவனாம்சம் மகன்களைப் பார்க்கலாம் ரவி மோகனுக்கு நீதிமன்றம் ORDER?
ரவி மோகன் - ஆர்த்தி ரவி விவாகரத்து வழக்கு விசாரணையில் இருக்கும் நிலையில், ரவி மோகன் தன்னுடைய மகன்களைப் பார்க்க எந்தத் தடையும் இல்லை என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரவி மோகனும் - ஆர்த்தி ரவியும் சினிமா உலகில் பிரபலமான தம்பதியாக வலம் வந்த நிலையில், கடந்த 2024 செப்டம்பரில், ஆர்த்தியுடனான 15 வருட திருமண உறவை முறித்துக்கொள்வதாக அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டார். மேலும், சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுவும் தாக்கல் செய்தார்.
பின்னர் நீதிமன்றம், இருவரையும் சமரச தீர்வு மையத்துக்கு அனுப்பிவைத்த பிறகும், ரவி மோகன் தனக்கு விவாகரத்து வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதையடுத்து, ஆர்த்தி ரவி தன்னுடைய செலவு, குழந்தைகளின் படிப்பு செலவு ஆகியவற்றுக்கு ஒவ்வொரு மாதமும் 40 லட்சம் வேண்டும் என இடைக்கால ஜீவனாம்சம் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதற்கிடையே, தன்னுடைய மனைவி தன்னை அடிமை போல நடத்தியதாகவும், தான் சம்பாதித்தாலும் ஆர்த்தியிடம் தான் காசு கேட்டு வாங்க வேண்டியிருந்ததாகவும் பரபரப்பு குற்றச்சாட்டுகளை வைத்தார்.
அதேவேளையில், பாடகி கெனிஷாவும் ரவி மோகனும் வெளியில் ஒன்றாக சுற்றும் வீடியோக்கள் வெளியானதைத்தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் ஒரு தரப்பு கெனிஷாவை விமர்சித்தும், இன்னொரு தரப்பு ஆர்த்தியை விமர்சித்தும் பதிவிட்டு வந்தனர்.
இதனால், விவாகரத்து வழக்கு தொடர்பாக ரவி மோகன் மற்றும் ஆர்த்தி என இரு தரப்பும் பரஸ்பரம் எந்த கருத்துகளையும் பொது வெளியில் தெரிவிக்கக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
இவ்வாறிருக்க, கடந்த மே மாதம் கெனிஷா ரவி மோகனை விட்டு விலகுவதாக அறிக்கை வெளியிட்டுச் சென்ற பிறகு கண்ணீருடன் செய்தியாளர்களைச் சந்தித்த ரவி மோகன், தன்னை புரிந்துகொண்டு வந்த பெண்ணையும் காலி செய்து அனுப்பிவிட்டதாகவும், தனது மகன்களைக் கூட பார்க்க விடாமல் தடுப்பதாகவும் ஆர்த்தி மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது குற்றம்சாட்டினார்.
இதனால், நீதிமன்ற தடை உத்தரவு இருக்கும்போது பொதுவெளியில் எப்படி இவ்வாறு பேசலாம் என ஆர்த்தி நீதிமன்றத்துக்கு சென்றதையடுத்து, ரவி மோகன் மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டார். இந்த நிலையில், ரவிமோகன் விவாகரத்து வழக்கில் நீதிமன்றம் முக்கிய உத்தரவு போட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதில், ரவி மோகன் ஆர்த்திக்கு மாதம் 3 லட்ச ரூபாய் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்றும், மகன்களைப் பார்க்க அப்பாவுக்கு தடை இல்லை என நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்படுகிறது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. நீதிமன்றத்தின் இத்தகைய உத்தரவு ரவி மோகன் தரப்புக்கு சற்று நிம்மதி ஏற்படுத்தியிருப்பதாகப் பேசப்படுகிறது.