Minister SS Sivasankar | ”நான் புதுசா MINISTER ஆகல இங்க பல தடவ வந்திருக்கேன்” அமைச்சர் சிவசங்கர் வாக்குவாதம்
நான் புதுசா அமைச்சரானது போல பேசுகிறீர்கள், எத்தனை முறை இங்கே வந்து உள்ளேன் தெரியுமா? என செய்தியாளர்களுக்கும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர் விடுமுறையை முன்னிட்டு ஏராளமானோர் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். பயணிகள் சொந்த ஊருக்கு செல்வதாக ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நேற்று மாலை 5.30 மணி அளவில் நேரில் ஆய்வு செய்து, செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அதனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மாலை 5 மணியிலிருந்து செய்தியாளர்கள் அமைச்சரின் வருகைக்காக காத்திருந்தனர். தொடர்ந்து போக்குவரத்து துறை அமைச்சர் மூன்றரை மணி நேரம் காலதாமதமாக 09 மணி அளவில் பேருந்து நிலையத்திற்கு வந்தார். பின்னர் போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும் வரை வெளியில் காத்திருக்குமாறும் பின்னர் செய்தியாளர்களை சந்திப்பதாக கூறினார்.
அப்போது செய்தியாளர்கள் போக்குவரத்து துறை அமைச்சரிடம், சார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக காத்திருப்பதாக தெரிவித்த போது, ஆத்திரம் அடைந்த அமைச்சர், நான் புதுசா மினிஸ்டர் ஆனது போல் பேசுகிறீர்கள், நான் எத்தனை முறை வந்திருக்கேன் தெரியுமா? இரண்டு டிபார்ட்மெண்ட் பார்க்கிறேன், தலைமை செயலகத்திற்கு வரும் அனைவரையும் சந்தித்து விட்டு தான் வர முடியும் எனக்கூறி செய்தியாளர்களை வெளியே செல்லுமாறு கூறியது அங்கே பரபரப்பை ஏற்படுத்தியது.