மத்திய அமைச்சரையே ஓடவிட்டவர் TVKவில் தலித் பெண் அமைச்சர் யார் இந்த கமலி?

தற்போது முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் அவிநாசி தனி தொகுதியில், மத்திய அமைச்சர் எல்.முருகனை தோற்கடித்த த.வெ.க வேட்பாளர் கமலி இன்று அமைச்சராகியிருக்கிறார். பட்டியலினத்தைச் சேர்ந்த இவரின் பின்னணி குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்தவர் கமலி.

அரசியல் பின்புலம் இல்லாத எளிய குடும்பத்தைச் சேர்ந்த இவர் முதுகலை படித்திருக்கிறார்.

இவரின் கணவர் இ- சேவை மையம் ஒன்றை நடத்தி வருகிறார்.

இல்லத்தரசியாக கமலி, அரசியல் மீதான ஈடுபாட்டின் காரணமாக, மக்களுக்கு நல்லது செய்யும் நோக்கில் தவெக-வில் இணைந்து தீவிரமாக களப்பணியற்றினார்.

முதல் தலைமுறை அரசியல்வாதியான இவருக்கு, அவிநாசி தனி தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட இளம் வேட்பாளர் மருத்துவர் கோகிலா மணி, அ.தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோரை எதிர்த்துப் போட்டியிடும் வாய்ப்பளித்தார் விஜய்.

போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே சுமார் 84 ஆயிரம் வாக்குகள் பெற்ற கமலி, திமுக வேட்பாளரை மூன்றாம் இடத்துக்கு தள்ளி, சுமார் 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாயசத்தில் எல்.முருகனை வீழ்த்தினார்.

வெற்றிக்குப் பின்னர் ஊடகத்திடம் பேசிய கமலி, "எங்கள் குடும்பத்தில் யாரும் தீவிர அரசியலில் ஈடுபட்டதில்லை. முதல்முறையாக நான் தான் வந்துள்ளேன்.

மக்கள் கொடுத்த இந்த வாய்ப்பை பயன்படுத்தி அவர்களுக்கு நல்லது செய்ய விரும்புகிறேன்.

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து அடித்தட்டு மக்களின் வலியை உணர்ந்து வந்துள்ளேன்.

அவிநாசியில் தேவையான அடிப்படை வசதிகள் பல நிறைவேற்றப்படாமல் இருக்கிறது.

மக்களுக்கு அதனை நிறைவேற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் நான் செய்வேன்.

குறிப்பாக பெண்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்வேன்" என உறுதியாகக் கூறினார்.

எளிய குடும்பத்தில் பிறந்து, குறிப்பாக பட்டியலினத்திலிருந்து அமைச்சராக அதிகாரத்துக்கு வந்திருக்கும் கமலிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola