
”ரூ.12,000 வச்சுக்கோங்க” கையில் கொடுத்த மாணவி! பூரித்து போன அமைச்சர்
தமிழ்நாட்டிற்கு நிதி தராமல் இருக்கும் மத்திய அரசை கண்டித்து, தனது சிறுசேமிப்பு தொகை 12,000 ரூபாயை தமிழக அரசின் கல்விச்செலவிற்காக மாணவி கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்கும் வரை கல்விக்கான நிலுவை தொகை அளிக்கப்படாது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். கல்விக்கான நிதியை விடுவிக்க வேண்டும் என்றும், இந்தி திணிப்பு கூடாது என்றும் தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிதி விடுவிக்கப்படாததால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் 40 ஆயிரம் ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தில் 1000 முதல்வர் மருதங்களை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதில் ஒரு பகுதியாக செங்கல்பட்டில் முதல்வர் மருந்தகம் திறப்பு விழா செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டார். இந்த விழாவில் மத்திய அரசு தமிழக அரசிற்கு நிதி வழங்கமால், வஞ்சித்து வருவதால், திருப்போரூர் அடுத்த இள்ளலூர் ஊராட்சி பகுதியைச் சேர்ந்த அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் சரண்யா என்ற மாணவி தான் சேர்த்து வைத்திருந்த, சிறுசேமிப்பு தொகை ரூபாய் 12 ஆயிரத்துக்கான காசோலையை தமிழக அரசு கல்வி செலவிற்காக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.
அந்த மாணவிக்கு அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.