சினிமா காதலன் AVM சரவணன் காலமானார் அதிர்ச்சியில் திரையுலகம் | AVM Studios AVM Saravanan Death

Continues below advertisement

பிரபல திரைப்பட தயாரிப்பாளரும் ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளருமான ஏ.வி.எம் சரவணன் வயது மூப்பு காரணமாக இன்று அதிகாலை 5 மணியளவில் காலமானார். நேற்று தனது 85வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் இன்று அவரது உயிர் பிரிந்தது சோகத்தை பெரும் ஏற்படுத்தியுள்ளது.

திரைத்துறையில் 75 ஆண்டுகளுக்கும் மேல் நீடித்த வரலாற்றுப் பெருமை கொண்ட ஏவிஎம் நிறுவனத்தை, அதன் நிறுவனர் திரு. ஏ.வி.மெய்யப்பச் செட்டியார் அவர்களுக்குப் பின் திறம்பட நிர்வகித்து வந்தவர் ஏவிஎம் சரவணன். ஒரு தயாரிப்பாளராக மட்டுமல்லாமல், தந்தையின் பாரம்பரியத்தையும், சினிமா மீதான ஆர்வத்தையும் சேர்த்து, ஏவிஎம்-ஐ ஒரு ஆலமரமாக வளர்த்தெடுத்தவர் ஏவிஎம் சரவணன். 

தொழில்நுட்ப ரீதியாகவும், கதைத் தேர்வுகளிலும் இவரின் பங்களிப்பு மறக்க முடியாதது. நடிகர், நடிகைகளின் திறமையை மதித்து, அவர்களை உலகறியச் செய்ததில் இவருக்கு முக்கியப் பங்கு உண்டு. தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில், சுமார் 178-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை ஏவிஎம் நிறுவனம் தயாரித்துள்ளது. அவற்றில், ஏவிஎம் சரவணன் அவர்கள் மேற்பார்வையில் வெளியான சில படங்களை நிச்சயம் குறிப்பிட்டே ஆக வேண்டும். சமூகப் பிரச்சனையைக் காட்டிய 'நானும் ஒரு பெண், தேசிய விருது பெற்ற 'சம்சாரம் அது மின்சாரம், காதல் காவியமான 'மின்சார கனவு',ரஜினிகாந்தின் பிரம்மாண்ட வெற்றிகளில் ஒன்றான சிவாஜி மேலும், வேட்டைக்காரன் அயன் போன்ற வெற்றிப் படங்களையும் அவர் தயாரித்துள்ளார்.

இப்படங்கள் அனைத்தும் இன்றும் சினிமா ரசிகர்களால் பேசப்படும் காவியங்களாக உள்ளன. இவர் திரையுலகிற்கு அளித்த இந்த கொடையானது, தமிழ் சினிமா உள்ளவரை நிலைத்திருக்கும். ஏவிஎம் சரவணன் அவர்களின் உடல் சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோவின் மூன்றாவது தளத்தில் இன்று காலை 7.30 மணி முதல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர், திரையுலக ஜாம்பவான்கள், நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் ரசிகர்கள் எனப் பலரும் நேரிலும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் தங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். இறுதிச் சடங்குகள் இன்று பிற்பகல் 3 மணியளவில் ஏவிஎம் மயானத்தில் நடைபெறும் என்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஏவிஎம் சரவணன் அவர்களின் மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola